Published : 30 Mar 2020 08:06 PM
Last Updated : 30 Mar 2020 08:06 PM
வீட்டிலிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமையாசிரியர் ஒருவர் அனிமேஷன் வீடியோ தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு அறிவித்தது. அதற்கு முன்னர் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டதால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உள்ளனர். குழந்தைகளுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வின்றி வழக்கம்போலவே நண்பர்களுடன் சேர்ந்து தெருக்களில் விளையாடுகின்றனர்.
இச்சூழலில் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் உள்ள டாக்டர் டி. திருஞானம் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் க.சரவணன், அவரது மகள் லீலா மது ரித்தா, மகன் சத்யஜித் ஆகியோருடன் இணைந்து கரோனா வைரஸ் குறித்து அனிமேஷன் வீடியோவை உருவாக்கி வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். அதில், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது, பரவலைத் தடுக்க தனிமையின் அவசியம், சோப்பு போட்டு கைகளைக் கழுவும் முறை காரணம் குறித்தும் குழந்தைகளைக் கவரும் வகையில் 6 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமையாசிரியர் க.சரவணன் கூறுகையில், ''உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தைப் பார்த்து கரோனா வைரஸ் தாக்கம் அறிந்து முன்னரே அறிந்தேன். அதுகுறித்து பள்ளி மாணவர்களிடம் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவும் முறை குறித்து பொம்மலாட்டம் மூலம் விளக்கினேன்.
பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட் பிறகு, கரோனா வைரஸ் குறித்து அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தேன். எனது மகள் லீலா மது ரித்தா, மகன் சத்யஜித் ஆகியோர் டப்பிங் கொடுத்து அனிமேஷன் வீடியோ வெளியிட்டோம். இது எங்களது பள்ளி மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதுவரை 6 வீடியோக்கள் வெளியிட்டுள்ளேன்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுரைகளையும் வாசித்து செய்திகளை, வீடியோவாக மாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதேபோல், மாணவர்கள் விழிப்போடும், வீட்டிற்குள்ளேயே விளையாடும் வகையில் பாடங்களில் உள்ள குட்டிக்கதைகளையும், மற்ற பொதுவான குட்டிக்கதைகளையும் வீடியோவாக்கி வெளியிட்டுள்ளேன்'' என்றார்.
இதுகுறித்து அவரது மகள் லீலா மது ரித்தா (9-ம்வகுப்பு மாணவி), மகன் சத்யஜித் (4-ம் வகுப்பு மாணவன்) ஆகியோர் கூறுகையில், ''அப்பாவுடன் இணைந்து கரோனா விழிப்பிணர்வு வீடியோ தயாரித்து டப்பிங் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்று மற்ற மாணவர்களும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அப்பா தயாரித்த அனிமேஷன் வீடியோவில் டப்பிங் கொடுத்தோம்.
செல்போனை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டோம். பிரதமர் மோடியின் உரை குறித்து நாங்கள் தயாரித்த வீடியோவை அனைவரும் பாராட்டினர். அனைத்துக் குழந்தைகளும், மாணவர்களும் வெளியில் சென்று விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே இருங்கள். கரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்போடு இருப்போம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment