Published : 28 Mar 2020 12:35 PM
Last Updated : 28 Mar 2020 12:35 PM
நாடு முழுவதும் கரோனா அச்சத்தில் மக்கள் மூழ்கியுள்ள நிலையில், கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு விளையாட்டு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலக நாடுகளில் கரோனா தொற்று நோய் பரவியதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் தொடர்ந்து வருகிறது. மேலும், சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளிலும் கரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், பொழுதுபோக்கிட சமூக வலைதளங்களையும், தொலைக்காட்சிகளிலும் அதிக நேரங்களைச் செலவிட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று குறித்த செய்தி, விழிப்புணர்வுத் தகவல்களை பெரியவர்களும், முதியவர்களும் நொடிக்கு நொடி அறிந்து கொண்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை சில செயலிகள் ஏற்படுத்தி வருகின்றன.
குழந்தைகளிடம் பிரபலமான செயலியாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘ஸ்நாப் ஷாட்’ மூலம் குழந்தைகள் புகைப்படங்களை விதவிதமாகக் காட்சிப்படுத்தலாம். இந்த ‘ஸ்நாப் ஷாட்’ செயலியில் குழந்தைகளிடையே கரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் அடுத்தவர்களைத் தொடுவதற்கு அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கு சரியான விடை அளித்தால், பாராட்டுகள் கிடைக்கின்றன.
தவறாக பதில் அளித்தால், யாரையும் தொடாதீர்கள், 20 நொடிகளில் கைகளைக் கழுவிடுங்கள், முகம், வாய், கண், மூக்கு ஆகியவற்றைக் கைகளால் தொடுவதை தவிருங்கள் என்ற விழிப்புணர்வுத் தகவல் வருகிறது. அடிக்கடி தும்மினால் மருத்துவரைப் பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்துகிறது.
உணவு விடுதியில் வைக்கப்பட்டுள்ள ‘ஹேண்ட் ட்ரையரில்’ கைகளைக் காண்பித்து சுத்தம் செய்வது, கரோனா தொற்று பரவாமல் தடுக்க சரியான வழியா என்ற கேள்விக்கு, இது சரியான வழி அல்ல என்றும் சோப்பு போட்டு 20 நொடிகள் கை கழுவுவதே சரியான வழி என்று செயலி மூலம் பதில் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு சரியான பதில் அளிக்கும் குழந்தைகளுக்கு மதிப்பெண்ணும், தவறாக பதில் அளிக்கும் குழந்தைகள் மீது கரோனா தொற்று பரவுவதை போன்ற காட்சியை செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால், குழந்தைகள் கரோனா தொற்றில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதை, நேரடியாகவும், கேள்விக்கான பதில்கள் மூலமாக அறிந்து கொள்ளும் விதமான விழிப்புணர்வை இச்செயலி அறிமுகம் செய்துள்ளது.
கரோனா தொற்று சம்பந்தமாக இந்தச் செயலியில் ஏராளமான கேள்விகளும், பதில்களும் தொடர்ந்து வருகின்றன. இதன் மூலம் விளையாட்டு முறையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வும் பொழுதுபோக்கும் ஒருசேரக் கிடைத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT