Published : 25 Mar 2020 01:24 PM
Last Updated : 25 Mar 2020 01:24 PM
தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேந்திரிய வித்யாலய சங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2019-20 ஆம் கல்வியாண்டில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படும். தேர்வு எழுதிய அல்லது பல்வேறு காரணங்களால் தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களும் தரம் உயர்த்தப்படுவர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தக் கட்டாயத் தேர்ச்சி மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு, தேர்வுகள் இல்லாமலேயே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT