Published : 25 Mar 2020 07:37 AM
Last Updated : 25 Mar 2020 07:37 AM
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கியது. தமிழ், கணிதம், இயற்பியல், உயிரியல், வணிகவியல் உட்பட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. இந்தச் சூழலில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
அதேநேரம் பிளஸ் 2 வகுப்புக்கு நேற்று இறுதித் தேர்வு என்பதால் திட்டமிட்டபடி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தேர்வறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளைநன்கு கழுவிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படட்டனர். மேலும், வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிந்தே தேர்வு எழுதினர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அரைமணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு தேர்வுதொடங்கியது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். நிறைவு நாளில் நடைபெற்ற வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு முடிந்தபின் மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பல பள்ளிகளில் நடைபெற இருந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில பள்ளிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே, கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ல் தொடங்குவதாக இருந்தது. கரோனா வைரஸ் பரவலால் ஏப்ரல் 7-ல் தான் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.
விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் பட்டியலை தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் சுமார் 20 முதல் 24 நாட்கள் வரை நடக்கும். எனவே, ஏப்ரல் 24-ல் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகள் ஒருவாரம் வரை தாமதமாகும். ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரம்தான் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும். இதேபோல், 10, 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் மே இறுதியில்தான் வெளியாக வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT