Published : 24 Mar 2020 09:08 AM
Last Updated : 24 Mar 2020 09:08 AM

பிளஸ் 1 உயிரியல், வரலாறு தேர்வு; கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

சென்னை

பிளஸ் 1 பொதுத் தேர்வில் உயிரியல், வரலாறு கேள்வித் தாள்கள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு 4-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், உயிரியல், வரலாறு, தாவரவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 3,012 மையங்களில் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 7.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம்

இதுதொடர்பாக ஆசிரியர் மோசஸ்பாக்கியராஜ் கூறும்போது, “உயிரியல்,தாவிரவியல் பாடத்தை பொறுத்தவரையில், 7 ஒரு மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளன.மேலும், 2 மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிதாகவே இருந்தன. சராசரியாக படிக்கும் மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்றார்.

வரலாறு தேர்வு குறித்து ஆசிரியர் பார்த்திபன் கூறும்போது, “5 மதிப்பெண் கேள்வி ஒன்றில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த 5 சமூக சீர்திருத்தவாதிகளின் பணிகளும், அவர்களின் இயக்கங்கள் பற்றியும் காலக்கோடாக கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், பிற கேள்விகள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே வந்துள்ளதால் வரலாறு கேள்வித் தாள் மிகவும் எளிதாக அமைந்துவிட்டது” என்றார்.

இதுதொடர்பாக மாணவர்கள் சிலர் கூறும்போது, “முன்னதாக நடைபெற்ற கணக்கு,விலங்கியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகியவற்றில் இடம்பெற்ற அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளும் மிக கடினமாக இருந்தன. ஆனால், தற்போது நடைபெற்ற உயிரியல் பாடத்தின் ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிதாகவே இருந்தன. எனவே, நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும்26-ம் தேதி (வியாழக்கிழமை) முடிவடைய இருந்த நிலையில், நேற்றுஇரவு தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 144தடை உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்தமுடிவை தமிழக அரசுஎடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x