Published : 24 Mar 2020 08:58 AM
Last Updated : 24 Mar 2020 08:58 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை அரைமணி நேரம் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு: காலை 10.30 மணிக்கு தொடங்கும் என இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2 பொதுத் தேர்வை அரைமணி நேரம் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக10.30-க்கு தொடங்கி பகல் 1.45-க்கு முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.ராஜேஷ்என்பவர், கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்பதை தடுக்கவும், இவை தேவையான அளவுக்கு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்வு நேரங்களில் பள்ளி மாணவர்கள் பாதிப்படையா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஒய்.கவிதா மற்றும்அரசு தரப்பில் கூடுதல் தலைமைவழக்கறிஞர் பி.எச்.அரவி்ந்த்பாண்டியன், தலைமை அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு ப்ளீடர் சி.முனுசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அரசு தரப்பில், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை அதிகவிலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பதுக்கி விற்பனை செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில்பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை அரசு தள்ளிவைக்கவில்லை. தற்போது பொதுபோக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாது, என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள்,‘‘கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசுதேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. இருந்தபோதும் மாநிலம் முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தட்டுப்பாடின்றி முகக்கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

அன்றாட பொது போக்குவரத்துகுறைவாகவே இயக்கப்படும் என்பதால் மார்ச் 24 மற்றும் மார்ச் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளை அரைமணி நேரம் தாமதமாக தொடங்க வேண்டும். அதேபோல தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி தடைபட்டால், அதுதொடர்பாக முன்கூட்டியே பள்ளிதலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டும். அவர் தகுந்த ஏற்பாடுகளை அந்த மாணவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவையடுத்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி மார்ச்-24ல் நடைபெறவுள்ள பிளஸ்2 தேர்வு மற்றும் மார்ச் 26 அன்று நடைபெறவுள்ள பிளஸ்1 தேர்வை காலை 10.30-க்குதொடங்கி பகல் 1.45-க்கு முடிக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தி யுள்ளார்.

இந்நிலையில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 1 தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x