Published : 19 Mar 2020 12:31 PM
Last Updated : 19 Mar 2020 12:31 PM
பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் கட்டாயம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''தமிழகத்தில் நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்கெனவே அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மாா்ச் 17 முதல் மாா்ச் 31-ம் தேதி வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நடப்புக் கல்வி ஆண்டுக்குரிய தேர்வுப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தினமும் பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கரோனா வைரஸ் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரமாக வைத்திருக்கவும் , அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமிநாசினி, சோப்பு கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இதற்குத் தேவையான சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பொருள்களை பள்ளியின் தனிக் கட்டண நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
தற்போது 10 , 11, 12 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி தேர்வு நடைபெறும் நாளன்று நகராட்சி, மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அறைகளில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்துகொள்ளவும், பள்ளியின் தலைமையாசிரியர், தேர்வு மைய முதன்மை தேர்வுக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இது தொடா்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான அறிக்கையை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT