Published : 18 Mar 2020 07:31 AM
Last Updated : 18 Mar 2020 07:31 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கேமரா மூலம் கண்காணிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மீன்வளத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

விரல் ரேகை பதிவு

அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பாதுகாப்பு வசதியைப் பலப்படுத்தும் பொருட்டு, விரல் ரேகைப் பதிவு (Bio-Metric attendance), ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கேமரா (CCTV) மற்றும் ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுடைய மழலையர்களை அலுவலகப் பணி நேரங்களில் கவனித்துக் கொள்ள புதிதாக மழலையர் காப்பகம் (Creche) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x