Published : 17 Mar 2020 11:59 AM
Last Updated : 17 Mar 2020 11:59 AM
கோவிட்-19 அச்சுறுத்தலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் இன்று வெளியான உத்தரவில், ''கோவிட்-19 காரணமாக வரும் 31-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இக்காலத்தில் வகுப்புகள், தேர்வுகள், நூலக வசதி உட்பட அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன.
விடுதி மாணவ, மாணவிகளும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பச் செல்லலாம். விடுதிகள் அனைத்தும் நாளை மூடப்படும். பல்கலைக்கழகம் தொடங்கும்போது திரும்பி வரலாம். விடுதியில் இருந்து புறப்படும்போது வார்டனிடம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் மாணவர்கள் தங்கள் துறைத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களிடம் கல்வி தொடர்பாக தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT