

உடுமலையில் இருந்து பழநி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாலப்பம்பட்டி கிராமம். கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1960-ல் ஏற்படுத்தப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி 60 ஆண்டுகளை கடந்து, பல்வேறு அடிப்படை வசதிகளைக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் வகையில் இயங்கி வருகிறது.
இப்பள்ளி தலைமையாசிரியை வள்ளிமயில் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: பள்ளியின் முகப்பில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் நடைபாதையின் இருபுறமும் அலங்கார புல்வெளியும், அதனை ஒட்டியே அலங்காரச்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லா மல் இருந்த இப்பள்ளியின் சுற்றுச் சுவர் உள்ளேயும், வெளியேயும் பல வண்ண நிறங்களில் ஜொலிக் கிறது.
உட்புறச் சுவர்களில் குழந்தைகளைக் கவரும் வண்ணத்தில் பறவைகள், மரங்கள், விலங்குகள், தேசத் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
புரஜெக்டர், மடிக்கணி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றல் இனிதாக அமைகிறது. சிறு குழந்தைகள் பயிலும் வகுப்புகளில் அவர்களுக்கான டேபிள், நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன.
நுழைவு வாயிலில் பழமை வாய்ந்த ஆலமரமும், வேம்பும் மாணவர்களுக்கு வனச் சூழலை கொடுப்பதோடு, நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயமாக வும் திகழ்கிறது. பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கழிவறை, கைகழுவும் இடம், தூய்மையான சமையல் கூடம், இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தின் அடையாளம் காட்டுபவையாக கட்டப்பட்டுள் ளன. மியாவாக்கி முறையில் 70 மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மாணவர்களில் ஆங்கில வழிக் கல்விக்காக பகுதிநேர அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியைநியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான ஊதியத்தை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே வழங்குகின்ற னர். வரும் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தனியார் தொண்டு நிறுவனம் மற்றும்உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் இதுவரை ரூ.7 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ்,கண்காணிப்பு கேமரா, அலங்கார வளைவு, சிறுவர்களுக்கான நாற்காலிகள், மேசைகள், சிறப்பு சீருடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலீஸ் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தற்போது 66 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் சிறப்பம்சங்களைக் கண்டு, தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரவணன் கூறும்போது, ‘பாலப்பம்பட்டி அரசுப் பள்ளி கல்வி, சுகாதாரம், கற்பித்தல், சுற்றுச் சூழல், ஒழுக்கம், மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்துதல் என அனைத்து நிலைகளிலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
பள்ளியின் இத்தகைய நிலைக்கு பள்ளி தலைமையாசிரியையும், உடன் பணியாற்றும் ஆசிரியை களும்தான் முக்கிய காரணம். ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றின் உதவியால் அப்பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்தவும் நிதி உதவி அளித்துள்ளனர்’ என்றார்.