Published : 16 Mar 2020 06:04 PM
Last Updated : 16 Mar 2020 06:04 PM
புதுச்சேரியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள என்ஆர்எச்எம் கூடத்தில் இன்று நடந்தது. இதற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர்கள் ரகுநாதன், முருகன், பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது மாஸ்க் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் 65 பைசாவுக்கு விற்க வேண்டிய மாஸ்க் ரூ.20 முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து இருந்து வரும் பயணிகளை புதுவை எல்லையில் பரிசோதிப்பதற்கு, அவர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. சினிமா தியேட்டர், மால்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதல்வரிடம் பேசி தியேட்டர், மால்களை மூட நடவடிக்கை எடுப்பதாகவும், வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்குவதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "புதுவையில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கும் விடுமுறை விடுவது நல்லது.
புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகம் என மொத்தமாக 65 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இதில் அதிகமானோர் வெளி மாநிலத்தவர்கள்தான். என்னைப் பொறுத்தவரை இக்கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிப்பது நல்லது. இவை தொடர்பாக டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கு முதல்வர் திரும்பியவுடன் தெரிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
அங்கன்வாடிகள் மூடல்
புதுச்சேரியில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT