Published : 16 Mar 2020 04:46 PM
Last Updated : 16 Mar 2020 04:46 PM
பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், படிக்கும்போதே கைத்தொழில் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்த யோசனையை முன்னெடுத்த ஆசிரியர் தமிழரசன் பேசும்போது, ''கூடுதலாகத் தேவைப்படுகிற நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாமல் நிறைய மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
முடிந்தவரை அவர்களுக்கு உதவினாலும், அவர்களை சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பள்ளி நேரம் முடிந்து வாரம் 1 மணி நேரம் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு கைத்தொழில் வகுப்பை ஆரம்பித்தோம்.
இணையம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு கூடை பின்னுதல், ஜிமிக்கி கம்மல், வளையல் செய்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பை செய்தல், பழைய புடவைகள் மூலம் கால் விரிப்பு, பேனா ஸ்டேண்ட், புத்தக பைண்டிங் என ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மூலப்பொருட்களைப் பள்ளியின் சார்பாகவே கொடுத்தோம். விடுமுறை நாட்களில் ஒயர் கூடை, கம்மல், வளையல் செய்வதை வீட்டுப் பாடமாகவே கொடுத்தோம். ஒரு கூடை பின்னினால் 50 ரூபாய் ஊக்கத்தொகை என்று அறிவித்தோம். மாணவர்கள் ஏகப்பட்ட ஒயர் கூடைகள், கம்மல், வளையல்களைச் செய்து வந்தனர்.
அவை அனைத்தையும் சேர்த்து கைத்தொழில் மன்றத்தை ஆரம்பித்துள்ளோம். மாணவர்கள் தயாரித்த பொருட்களையெல்லாம், பள்ளிக்கு வெளியே கண்காட்சி மற்றும் விற்பனைக்காக மகாத்மா நேர்மை அங்காடியைத் தொடங்கியுள்ளோம். கைத்தொழில் மன்றத்தையும், நேர்மை அங்காடியையும் பள்ளி நாடாளுமன்றத்தின் மாணவ முதல்வர் கதிர்வேலும், துணை முதல்வர் தமிழ்ச்செல்வியும் தொடங்கி வைத்தனர்.
நிறைய மாணவர்கள் 50 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கதிர்வேலு 5 கூடை பின்னி 250 ரூபாய் பெற்றார். முதன்முதலாக உழைத்துச் சம்பாதித்த பெருமிதம் மாணவர்கள் முகத்தில் தெரிந்தது'' என்று புன்னகை பூக்கிறார் ஆசிரியர் தமிழரசன்.
கைத்தொழில் கற்பித்தல் தொடருமா என்று கேட்டதற்கு, ''இனிமேல் சனிக்கிழமை முழுவதும் வாழ்க்கைக் கல்விதான். அடுத்து தையல், ஸ்க்ரீன் பிரிண்டிங், துணிப்பை என்று ஏராளமானவற்றை முயற்சிக்க உள்ளோம். தையல் இயந்திரம் வாங்க வேண்டியுள்ளது.
மீன் பிடித்துக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி'' என்கிறார் ஆசிரியர் தமிழரசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT