Published : 16 Mar 2020 02:53 PM
Last Updated : 16 Mar 2020 02:53 PM
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத தனித் தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதுதொடர்பான விதிமுறைகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 2020-ல் நடைபெற உள்ளன. குறிப்பாக 03.06.2020 அன்று தொடங்கி 22.06.2020 வரை நடைபெறுகின்றன. மேற்படி தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள வழி விண்ணப்பத்தையும், பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
அதைத் தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிப்பது அவசியம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்த தேர்வரே நேரில் சென்று அணுக வேண்டும்.
உரிய தேர்வுக் கட்டண விவரம்
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-
மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100/-
மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100/-
பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15/-
ஆன்லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்திற்கு ) ரூ.50/-
தேர்வுக் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நாட்கள் 30.03.2020 முதல் 04.04.2020 வரை
தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT