Published : 16 Mar 2020 12:40 PM
Last Updated : 16 Mar 2020 12:40 PM
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்தக் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த, தேசியத் தேர்வுகள் முகமை மாணவர்களுக்குக் கடைசி வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 19-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் தங்களின் விண்ணப் படிவத்தைத் திருத்திக்கொள்ளலாம் அல்லது சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஜம்மு, காஷ்மீர் மாணவர்களும் இதே தளத்தில் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்க்க முடியும். தேர்வர்கள் மிகுந்த கவனத்துடன் தங்களின் தகவல்களைத் திருத்த வேண்டியது அவசியம். இதற்கு மேல் வாய்ப்புகள் வழங்கப்படாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.
மதிப்பெண் ஒதுக்கீடு
இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்ற அடிப்படையில், இரண்டு பாடங்களில் இருந்தும் மொத்தம் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள் வழங்கப்படும். உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு கேள்விக்கு ஒரு தவறான விடை அளிக்கும்பட்சத்தில், மொத்த மதிப்பெண்ணில் இருந்து 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வு அனுமதிச் சீட்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT