

தேர்வுகள் நடந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 120 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் மட்டும் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,150 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கோவிட் 19 காய்ச்சலால் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யாருக்கும் தற்போது கரோனா தொற்று இல்லை.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விடுமுறை மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், சிறப்புப் பள்ளிகளுக்கும் பொருந்துமா? தேர்வு நேரங்களில் விடுமுறை அறிவிப்பு அமலாகுமா என்று குழப்பம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ''மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டது என்பதால் தேர்வுகள் நடந்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டியது கட்டாயம். தேர்வுகளை நடத்தாமல் அடுத்த கல்வியாண்டில் நடத்திக் கொள்ளலாமா அல்லது மாணவர்களை நேரடியாக அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது'' என்று தெரிவித்தனர்.