

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களைச் சேர்ப்பது குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2011-ல் தொடங்கி கடந்த 9 ஆண்டு காலமாக இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும்பாலான தனியார் பள்ளிகள் முழுமையாகக் கடைப்பிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அரசே குழந்தைகளைத் தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறது.
இதற்காக 2017-ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். இதையொட்டி மாணவர்களைச் சேர்ப்பதற்கான விவரங்களை, பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.