பள்ளிகளில் சைனிக் பயிற்சியைக் கட்டாயமாக்குக: அரசுக்கு முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை

பள்ளிகளில் சைனிக் பயிற்சியைக் கட்டாயமாக்குக: அரசுக்கு முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை
Updated on
1 min read

பள்ளிகளில் சைனிக் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முன்னாள் ராணுவத்தினர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ராஷ்ட்ரிய சைனிக் சன்ஸ்தா குழுவின் தலைவரும் வீர் சக்ரா விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற கர்னல் தேஜாந்திர பால் தியாகி கூறும்போது, ''நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் வளர்க்கவும் பள்ளிகளில் போர் வீரர்களுக்கான அடிப்படைப் பயிற்சியை வழங்கவேண்டும். குறைந்தபட்சம் ஆரம்பப் பள்ளிகளிலாவது இந்தப் பயிற்சியை வழங்குவது அவசியம்.

சைனிக் பயிற்சிக்கான பிரதான பாடங்களாக முதலுதவி, ரோந்து, பேரிடர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ், சுதந்திரப் போராட்ட உணர்வு, உடற்பயிற்சி ஆகியவை இருக்கும்.

குறைந்தபட்ச சைனிக் பயிற்சியைப் பெற்ற மாணவர்கூட, வன்முறைக்குத் துணை போக மாட்டார். தற்காப்பில் வல்லவராக இருப்பார். காவல்துறைக்கு இடையூறு விளைவிக்க மாட்டார்.

ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது. எனினும் இதைத் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி இருக்கிறோம். இந்தப் பயிற்சியை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் இணைத்து, கற்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்'' என்று கர்னல் தேஜாந்திர பால் தியாகி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in