அன்புள்ள மாணவருக்கு!- 2: நாளைய உலகு உன்னிடம்!

அன்புள்ள மாணவருக்கு!- 2: நாளைய உலகு உன்னிடம்!
Updated on
2 min read

அர்ப்பணிப்பும் தனித்துவமும் மிக்க தன்னிகரற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 88 பேருக்கு 'இந்து தமிழ் திசை', அன்பாசிரியர் விருது வழங்கி அண்மையில் சிறப்பித்தது. அந்த அன்பாசிரியர்கள் மூலம் எதிர்கால சமூகத்தினருக்குத் தேவையான தகவல்களை, கடத்த நினைத்தோம். அறிவுரையாக அல்லாமல், அன்புரையாக ஒரு தொடர் வழியாகச் சொல்ல ஆசைப்பட்டோம்.

அன்புள்ள மாணவருக்கு தொடர் இங்கே உயிர் பெற்றிருக்கிறது. அதில் இரண்டாவது நபராக அன்பாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணனின் அன்புரை இங்கே..

மாணவச் செல்வங்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நீ - சின்ன விதைதான்
உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது
பிரம்மாண்டமான மரம் -
உன் வேர்களுக்குப் பூமியும் எல்லையில்லை
உன் கிளைகளுக்கு வானமும் எல்லையில்லை
- கவிக்கோ அப்துல் ரகுமான்.

வாழ்க்கையின் வளமான பருவங்களில் மாணவப் பருவமும் ஒன்று. இந்தப் பருவத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள ஆற்றல்களை எல்லாம் காட்டாற்று வெள்ளமாக ஓடவிடாமல், அதைத் தேக்கி வைக்கிற அணைக்கட்டுகள் போல, ஆற்றலைத் தேக்கிச் சமூகத்துக்குப் பயன்படுத்துங்கள் .

உங்கள் அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதுதான் முதல் வேலை. 'அமைதியான கடல் ஒருபோதும் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை ' என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. வாழ்வில் சில நேரங்களில் சிக்கல்கள் வரும். அதை விக்கல் போல் விரட்டி அடியுங்கள். தாழ்வு மனப்பான்மைக்குத் தாழ்ப்பாள் போடுங்கள். எதையும் சந்திக்கும் துணிச்சல் உங்களிடம் வேண்டும்.

எதிர் நீச்சல் போடு- எதிர்காலம் உண்டு. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளாதே, பொறுமையுடன் எந்தவொரு செயலையும் செய். மாணவப் பருவத்திலேயே சமூகப் பணி ஆற்றிட முன் வா. பிறரை மதிக்கும் பண்பைக் கற்றிடு. இனத்தின் மீதும் மொழியின் மீதும் பற்று கொள். மண்ணையும் மரத்தையும் நேசி. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயம் மேலோங்கி நிற்க வேண்டும்.

எப்பொழுதும் செல்பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்காதே; ஆசிரியர்கள், பெற்றோர், மூத்தோரின் பேச்சைக் கேள். தேர்வைக் கண்டு அச்சப்படாதே. தேர்வுதான் உன்னைக் கண்டு அச்சப்பட வேண்டும். அச்சம் தவிர்த்து, உச்சம் தொட எந்த ஒரு பாடத்தையும் விரும்பிப் படி, வெற்றி நிச்சயம் உண்டு. உன் வாழ்க்கை உன் கையில் என்பதை உணர்ந்து செயல்படு .

'பொழுது போக்குவதற்கு அல்ல; ஆக்குவதற்கு' என்பதை நினைவில் கொண்டு நன்றாகப் படி. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவர். நினைப்பது உயர்வாக இருக்க வேண்டும் . 'உன் திறமையின் உயரமே உன் உயரம்' என்பதை நினைவில் நிறுத்தி முயற்சி செய்.

'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்' என்கிறார் திருமூலர். நாளும் உடற்பயிற்சி செய். உடலும் உள்ளமும் ஒன்றாக, நன்றாக இருக்கவேண்டும், இயங்கவேண்டும் . உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு வேண்டும் . உடலுக்குத் தீங்கில்லாத உணவை உண். துரித உணவைத் தூர எறி.

''நாளைய உலகு உன்னிடம். நம்பிக்கையுடன் நடை பயில்''.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in