Published : 13 Mar 2020 11:18 AM
Last Updated : 13 Mar 2020 11:18 AM
கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தீஸ்கர், மணிப்பூரில் மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன.
சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாஹே, டெல்லி ஆகிய பகுதிகளில் மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 7-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் கேபினெட் அமைச்சரவைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் வியாழக்கிழமை வரை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அதேபோல மணிப்பூர் மாநிலத்திலும் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற உள்ளன. திரளான மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT