Published : 12 Mar 2020 11:10 AM
Last Updated : 12 Mar 2020 11:10 AM
கரோனா வைரஸ் பரவல் பாதிப்பு கருதி மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''சீன நாட்டில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு பரவலாகி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12-ம் வகுப்பினைத் தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்து செய்து விடுமுறை அளித்து ஆவன செய்ய வேண்டுகிறோம். மேலும் கர்நாடகாவில் கரோனா வைரஸ் அறிகுறியோடு ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. எனினும் அவை அனைத்தையும் குழந்தைகள் கடைப்பிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே குழந்தைகளின் நலன் கருதியும், தற்போது சளி, இருமல், தும்மல் போன்றவை அதிகரித்து வருவதால் வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க வேண்டியது அவசியம். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமுன் காத்திடும் நோக்கில் எல்.கே.ஜி வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மார்ச் 31 வரை விடுமுறை வழங்க ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT