Published : 11 Mar 2020 11:00 AM
Last Updated : 11 Mar 2020 11:00 AM
தனக்கு கரோனா அறிகுறி இருப்பதாக விளையாட்டாகக் கூறி, 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 80 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் அதிகம் கூட வேண்டாம், சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தினசரி அலுவலுக்குச் செல்லாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கு கரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி, 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை, முகலிவாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தற்போது நாட்டில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே, மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். அரசாங்கமும் இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, எனது விடுப்பு நாள்களை வருகை நாளாகப் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து தலைமை ஆசிரியர் விசாரித்தார். அதில் விளையாட்டாகக் கடிதம் எழுதியதாக சிறுவன் தெரிவித்துள்ளார். எனினும் முகலிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
எனினும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மாணவரை தலைமை ஆசிரியர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT