Published : 10 Mar 2020 03:10 PM
Last Updated : 10 Mar 2020 03:10 PM
கரோனா அச்சுறுத்தலை அடுத்து, கேரளாவில் 7-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 80 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவிலும் புதிதாக 12 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அங்கன்வாடி முதல் 7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விடுமுறை கால வகுப்புகள், பயிற்சி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், மதரஸாக்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
எனினும் 8 முதல் 12 வரையான வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். அதேபோல கரோனா பாதிப்புக்கான அறிகுறிகளோடு இருப்பவர்கள், தேர்வுகளை எழுத அனுமதியில்லை எனவும் பின்னர் எழுதலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல அங்கன்வாடி குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளில் இருந்தே உணவு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT