Published : 10 Mar 2020 01:10 PM
Last Updated : 10 Mar 2020 01:10 PM

மதிப்பெண்களைத் தாண்டிய அன்பு: ஆசிரியருக்கு நெகிழ்ச்சி வேண்டுகோள் விடுத்த மாணவன்; வைரல் பதிவு

சித்தரிப்புப் படம்

அமெரிக்காவில் தன்னுடைய போனஸ் புள்ளிகளை, குறைந்த மதிப்பெண் வாங்கிய யாரென்றே தெரியாத தோழனுக்காக வழங்க முன்வந்த சிறுவன் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தின் தலைநகரம் ஃப்ராங்ஃபோர்ட். அங்குள்ள பள்ளியொன்றில் படிக்கும் சிறுவன் குறித்து, வின்ஸன் லீ என்னும் வரலாறு ஆசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ''என்னுடைய மாணவர்களில் முதலிடம் பிடிக்கும் ஒருவன், தன்னுடைய 5 போனஸ் புள்ளிகளை, மதிப்பெண் தேவைப்படும் சக மாணவனுக்குத் தர முன்வந்தான். தான் பெற்ற மதிப்பெண்களை, தனது உரிமையை, போராடிப் பெற்ற பிறகும் தேவைப்படும் ஒருவருக்காக வழங்க முன்வந்தான்.

அந்த மாணவன் எழுதியிருந்த குறிப்பில், 'என்னுடைய போனஸ் புள்ளிகளை குறைவான மதிப்பெண்கள் பெற்ற யாருக்காவது தர முடியுமா?' என்று கேட்டிருந்தான். 94 மதிப்பெண்கள் எடுத்த அவனுக்கு 5 போனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன. யாரென்றே தெரியாத சக மாணவனுக்காக தனது மதிப்பெண்களை வழங்க முன்வருவது எத்தனை உயரிய பண்பு?

சிறுவனின் இந்தக் குறிப்பு எனக்கு ஏராளமான நம்பிக்கையைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. என்னுடைய 12 வருட ஆசிரிய அனுபவத்தில், இத்தகைய வேண்டுகோளை எதிர்கொண்டது இதுவே முதல் முறை. இந்த சின்னஞ்சிறுவன் போல நாம் அனைவரும், எல்லோரிடமும் அன்பாக இருப்போம்'' என்று லீ பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x