Published : 09 Mar 2020 03:22 PM
Last Updated : 09 Mar 2020 03:22 PM

காணொலி மூலம் தொகுப்பாளரான ஆசிரியர்கள்: களத்தூர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் புதுமை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரைக் காணொலி மூலமாகவே தொகுப்பாளராக்கி, களத்தூர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், மு.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டுவிழா கடந்த 28.02.2020 (வெள்ளிக்கிழமை அன்று) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் முதன்முறையாக 12×8 அளவில் எல்.இ.டி. திரையின் பின்னணியில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பப்பட்டன. பள்ளி தொடர்பான அனைத்துக் காணொலிகளும் அத்திரையில் ஒளிபரப்பப்பட்டு பள்ளியில் செய்துவரும் செயல்பாடுகள் மக்களுக்கு விளக்கப்பட்டன. அந்த காணொலிக் காட்சிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் பின்னணிக் குரல் கொடுத்து, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இதுகுறித்து களத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி கூறும்போது, ''வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர் எந்தவித ஈகோவும் இல்லாமல் குரல் கொடுத்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியை சித்ரா, திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியை விஜயலட்சுமி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை சாலை கலாவள்ளி ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்தனர்.

ஆடல் பாடலைவிட எங்கள் பள்ளியில் நாடகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். அதன் மூலம் ஏதேனும் ஒரு செய்தியை மக்கள் மனதில் பதியும் வண்ணம் கூறுவோம். இம்முறையும் கல்வியா? செல்வமா? வீரமா? என்னும் நாடகம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல ஒருவர் தவறாது அனைத்து மாணவர்களையும் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்து விடுவோம். வெறும் ஆடல், பாடலுடன் முடிந்துவிடாமல் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வெளிக்கொணரும் வண்ணம் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக முதல் வகுப்பு மாணவர்கள் 30 பழமொழிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகக் கூறினர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் விவேகானந்தர் போல வேடமிட்டு மாணவர்களுக்கான அறிவுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கினர்'' என்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.

அதேபோல வெவ்வேறு பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் செந்தில், சிவகுமார் ஆகிய இரண்டு ஆசிரியர்களின் பணியனுபவங்கள், கற்பித்தல் முறைகளும் ஆண்டு விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

விழா குறித்து மேலும் பேசிய குருமூர்த்தி, "நான் விழாவின் பாதியிலேயே சென்றுவிடலாம் என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் என்னை முடியும்வரை அமரவைத்துவிட்டன" என்று ஓர் ஆசிரியர் கூறியது ஆண்டுவிழா வெற்றியடைந்ததைக் காட்டுகிறது.

அண்மையில் நடந்த பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் "ஆண்டுவிழா" என்று சொல்லக்கூடாது, மாறாக "ஊர் கூடிக் குழந்தைகள் திருவிழா" என்றே சொல்ல வேண்டும் என்றார்கள். அதனால் அந்தத் தலைப்பிலேயே நாங்களும் விழாவை நடத்தினோம்.

இதுவரை எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் ஆண்டறிக்கை வாசித்ததில்லை. ஏனெனில் எங்கள் பள்ளி ஆண்டு விழாவே ஓர் ஆண்டறிக்கைதான். இவ்விழாவைப் பார்த்த வார்டு உறுப்பினர்கள், அடுத்த ஆண்டு விழாவுக்கான அனைத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்'' என்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x