Published : 06 Mar 2020 04:06 PM
Last Updated : 06 Mar 2020 04:06 PM
கரோனா வைரஸ் தொற்று நோயால் 13 நாடுகளைச் சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டநிலையில், 290 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனா பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3,291 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் சீனாவுக்கு வெளியே கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு 17% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் குழந்தைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அஸவுலே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கரோனா வைரஸ் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அவசரகால நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் மற்றும் பிற நெருக்கடிகளின் விளைவாக தற்காலிகப் பள்ளி மூடல்கள் புதியவை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய கல்விச் சீர்குலைவு அதிகமாக உள்ளது. இது நீடித்தால், கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
யுனெஸ்கோவுக்குக் கிடைத்துள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி பெரும்பாலான பாதிப்பு சீனாவில் ஏற்பட்டுள்ளது. இங்கு 23 கோடியே 33 லட்சம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட1 கோடியே 65 லட்சம் ஆகும். ஈரானில் 1 கோடியே 45 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 9 நாடுகள் உள்ளூர் பள்ளிகளை மூடிவிட்டன. உள்ளூர் பள்ளிகள் தவிர, நாடு தழுவிய அளவில் பள்ளிகளை மூடினால், மேலும் 180 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்படும்.
பல காரணங்களுக்காக பள்ளி மூடல்கள் சிக்கலானவை. அவை கற்றல் சாதனையை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. தங்கள் கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்ற பெற்றோர்கள் தங்கள் பணி கடமைகளை குழந்தைகள் வழியே சமப்படுத்த போராடி வருகிறார்கள். கல்வி அளித்து குழந்தைகளை வளர்க்கும் அவர்களின் பொருளாதார உற்பத்தி இலக்குகள் பள்ளிகளை மூடுவதால் கடுமையாகப் பாதிக்கின்றன.
இப்படி பள்ளிகள் மூடப்படுவதால் பின்தங்கிய குடும்பங்கள் குறைந்த அளவிலான கல்வியையும், கற்றல் இடைவெளிகளை நிரப்புவதற்கான குறைந்த வளங்களையும் கொண்டிருப்பதால், சமத்துவமின்மை மேலும் கூடுகிறது.
பள்ளி உணவைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்குக் கடும் பாதிப்பு
பள்ளிகள் மூடப்படுவதால் கல்வி பாதிப்பு மட்டுமல்ல இன்னும் பிற எதிர்மறையான விளைவுகளும் உண்டு. வீட்டில் போதிய ஊட்டச்சத்து பெற முடியாத குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் உணவையே சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் நிலை இதனால் கடும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்காக இயங்கி வரும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் எதிர்பாராத சீர்குலைவுகள் ஏற்படும். பல நாடுகளில் பள்ளிகளுக்காக இயங்கும் சுகாதாரப் பணியாளர்களில் பெண்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். மேலும், பள்ளிகளை மூடும்போது தங்கள் குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்கான அவசியம் ஏற்படும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்,
மீண்டும் பள்ளி திறந்தாலும் இடைநிற்றலுக்கு ஆளான குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதை உறுதி செய்வது மிகப்பெரிய சவால் ஆகும்.
அனைவருக்கும் கற்றல் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக யுனெஸ்கோ அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான தொலைதூரக் கற்றல் திட்டங்களைச் செயல்படுத்த நிறுவனம் உதவுகிறது. இதற்காக அடுத்த வாரம் கல்வி அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது.
இது அவசர அவசியமான ஒரு கூட்டம்தானே தவிர, இது ஒரு பயிற்சி அல்ல. இது அதற்கான நேரம் அல்ல. அந்த அளவுக்கு நேரமும் இப்போது இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துவிதமான முடங்கிய நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய ஒரு நேரம் இது''.
இவ்வாறு யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அஸவுலே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT