Published : 03 Mar 2020 08:19 AM
Last Updated : 03 Mar 2020 08:19 AM
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் சென்னையில், வரும் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து மார்ச் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.
இதில் 8-ம் வகுப்பு முதல் கலை அறிவியல் பட்டப்படிப்பு வரை (ஐடிஐ, பாலிடெக்னிக் உட்பட) அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் கலந்துகொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம். வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
இந்த முகாமில் 15-க்கும்மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1,000-க்கும்மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய உள்ளன. இளைஞர்கள் இந்தஅரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT