Published : 02 Mar 2020 11:01 AM
Last Updated : 02 Mar 2020 11:01 AM
மனித வாழ்வில் இன்பம் தருவது ஓராண்டுக்கு ஒரு முறை வரும் தேர்த் திருவிழா. அதுபோல மாணவர் வாழ்வில் இன்பம் தருவது கல்வியாண்டின் இறுதியில் வரும் தேர்வுத் திருவிழா.
தேர்வுகள் தவிர்க்க முடியாதவை; இன்றியமையாதவை. அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை எடுத்துச் செல்பவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். தான் யார் என அவர்களுக்கே அறிமுகம் செய்து வைப்பவைதான் தேர்வுகள். மாணவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிய வைக்கும் தேர்வில், பயிற்சியும் முயற்சியும் இருந்தால் விண்ணில் கூட தடம் பதிக்கலாம்.
மாணவர்களே, தேர்வுத் திருவிழாவிற்குத் தயாராக என்ன செய்ய வேண்டும்?
* ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருமுகப்படுத்த வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் படிப்பது சாலச் சிறந்தது.
* படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் படித்தல் மிகவும் நல்லது.
* அவற்றை மனக் கண் முன் நிறுத்தி, மீண்டும் மீண்டும் திருப்புதல் செய்தல் வேண்டும்.
* படித்த பாடத் தகவல்களை நினைவில் நிறுத்த சில உத்திகளைப் பயன்படுத்தலாம்.
* தேர்வின்போது, படித்த தகவல்களை வரிசைப்படுத்தி தெளிவாக விடை அளித்தல் வேண்டும்.
* கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழுத் தகவல்கள் அளிக்க வேண்டும்.
* விளக்கப் படம், சமன்பாடு, கணக்கீடுகள் ஆகியவற்றை தேவையான இடத்தில் தெளிவாக எழுதுதல் வேண்டும்.
உடலையும், மனதையும் ஒருங்கிணையுங்கள்
* மனதை தெளிவாக உற்சாகமாக வைக்க, தேர்வு காலங்களில் உடலை நன்முறையில் பாதுகாப்பது நல்லது.
* எளிதில், விரைவில் செரிக்கும் சைவ வகை உணவுகளை உட்கொள்வது நல்லது.
* நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
* இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து படிப்பது கூடாது.
* தேர்வு நேரத்தில், மூளையை ஆரோக்கியத்துடன் வைத்தால் தான், படித்த செய்திகளை நினைவுகூர்ந்து எழுத முடியும்.
* புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களின் தகவல்களும் தனக்கு தெரியும் என்ற தன்னம்பிக்கை மிக, மிக அவசியம்.
* தேர்வு கண்டு அச்சம் கொள்ளாதீர்கள்.
* தேர்வு எழுதத் தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு குறித்த நேரத்துக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
* தேர்வறைக்குள் பயப்படாமல் செல்லுங்கள், கேள்வித்தாளைப் பார்த்து பதற்றம் கொள்ளாதீர்கள்.
* அமைதியாக, பொறுமையாக இருந்தால், எல்லா கேள்விகளுக்கும் பதில் உங்கள் பேனா முனையிலே இருக்கும்.
* ஒவ்வொரு தேர்விற்குப் பின்னும் மனம் தளராமல் இருங்கள்.
* தேர்வு மையத்தில், தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு எழுதுங்கள். விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது நம் கடமை ஆகும்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் மகுடம் சூட்டப்பட்டு, சரித்திரம் படைக்கும் சந்ததிகளாக நீங்கள் வருவீர்கள், வாழ்த்துகள்!
-பொன்.வள்ளுவன், அரசுப் பள்ளி ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT