Published : 02 Mar 2020 10:25 AM
Last Updated : 02 Mar 2020 10:25 AM
தமிழகப் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரியிலும் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. புதுச்சேரி, காரைக்காலில் 15719 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச் 24-ம் தேதி வரை நடக்கிறது. இதில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 14,962 மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகின்றனர். 757தனித் தேர்வர்களும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வைப் புதுச்சேரியில் உள்ள 44 அரசுப் பள்ளிகள் மற்றும் 91 தனியார் பள்ளிகள் என 135 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 12 ஆயிரத்து 577 மாணவ மாணவிகளும் 579 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். அதே போல் காரைக்காலில் உள்ள 23 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 385 மாணவ, மாணவிகள், 178 தனித்தேர்வர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 32 மையங்களிலும் காரைக்காலில் 9 மையங்களிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும் காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு கால்குலேட்டர், செல்போன் போன்ற உபகரணங்கள் எடுத்துச்செல்லக்கூடாது, மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது, ஆசிரியர்கள் தேர்வறைக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என கடுமையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவ, மாணவிகளுக்காக 24 மணி நேர தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளும் தேர்வு மையத்தில் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு அறை மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் புரியும் குற்றத்துக்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும். எனவே தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT