Published : 02 Mar 2020 07:18 AM
Last Updated : 02 Mar 2020 07:18 AM
தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில்,இத்திட்டத்தை நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சத்துணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பதாக நிலவும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் தர நிபுணர்கள், கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க பள்ளிகளில் இலவச சத்துணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 48 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில் 5,785 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பெங்களூருவின் ‘அட்சய பாத்திரா’ தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு தொடங்கியுள்ளது.
2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 16,856 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 17 லட்சம் குழந்தைகளுக்கு சைவ உணவுகளை தயாரித்து வழங்குகிறது. அதனால் உணவில்பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டை சேர்க்கப்படுவதில்லை. மேலும், காலை உணவுவழங்கும் பணியை அரசே செய்யாமல், தனியார் அமைப்பிடம் ஏன் வழங்க வேண்டும்என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ‘‘தமிழகம் பல தடைகளைத் தாண்டி, வளர்ந்த நாடுகளே வியக்கும் அளவுக்கு சத்துணவு திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சிறப்பாக உள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன், காலை உணவையும் அரசே தயாரித்து வழங்குவதே சிறந்த நடைமுறையாகும். அதை தனியாரிடம் தருவது ஒரு நியாயமான அணுகுமுறை கிடையாது. காலை உணவு தனியாரிடம் வழங்கினால், தொடர்ந்து மதிய உணவும் தனியார்வசம் செல்லக்கூடும்.
தனியார் அமைப்பு உணவளித்தால் அவர்களின் விருப்பப்படிதான் வழங்குவார்கள். அதனால் இந்த பொறுப்பை தமிழக அரசே ஏற்பதுடன், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் தரவேண்டும்’’ என்றார்.
‘அட்சய பாத்திரா’ நிறுவன தூதரும், ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறியதாவது:
‘அட்சய பாத்திரா’ இந்து மதம் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் என்றபோதும், அதன் தொழில் தர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளதால் அதனுடன் இணைந்து பணிபுரிகிறேன். நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தரமான உணவுகளைத்தான் தயாரித்து தருகின்றனர். அவர்கள் சமையற்கூடம் மிகவும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவை இலவசமாக வழங்கும் ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதில் தவறில்லை.
ஆரோக்கியம் என்பது வசதியானவர்களுக்கு மட்டுமல்ல ஏழைகளின் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதனால் எந்த மதத்தை சேர்ந்த நிறுவனங்களும் ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு வழங்கினால் ஆதரிப்பேன். அந்தவகையில் ‘அட்சய பாத்திரா’ காலை உணவு திட்டத்தை சிறப்பாக செய்துவருகிறது.
அதன் செயல்பாட்டிலும் வெளிப்படைத்தன்மை உள்ளது. அதனால் அந்த நிறுவனத்திடம் மதிய உணவு திட்டத்தை வழங்கலாம். அதேநேரம் தமிழக அரசு எந்த ஒரு நிறுவனத்திடம் உணவு திட்டத்தை தந்தாலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டசத்து போன்ற அம்சங்கள் பூர்த்தி அடைகின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும். சாதி, மதம், அரசியல் காரணங்களை முன்வைத்து தரக்கூடாது என்றார்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘நம் மாணவர்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் தரமான உணவுகளை இலவசமாக வழங்கும்போது அதை அனுமதிப்பதில் தவறில்லை. அதன்படியே ‘அட்சய பாத்திரா’ நிறுவனம் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால் இடைநிற்றல் குறைந்துள்ளதுடன், மாணவர்களும் ஆர்வமாக பள்ளிக்கு வருகின்றனர்.
அட்சயாவின் பணி சிறப்பாக உள்ளதால்மதிய உணவு திட்டத்தையும் அவர்களிடம்வழங்க அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம். ஆனால், அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. மேலும், குழந்தைகள் நலன்சார்ந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது’’ என்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காலை உணவு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவதில் நிதி பற்றாக்குறை தடையாக இருக்கிறது. இதனால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்ததாக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்தத் திட்டம் நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட முடிவாகியுள்ளது.
மறுபுறம் செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக மதிய உணவு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அமைச்சரவை கூடியே முடிவெடுக்க முடியும். மேலும், இந்தத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதால் தனியாரிடம் தாரைவார்க்கும் வாய்ப்புகள் குறைவுதான்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT