Published : 27 Feb 2020 05:11 PM
Last Updated : 27 Feb 2020 05:11 PM
பள்ளி மாணவர்களின் மாநிலப் பாடத் திட்டத்துக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ளன. போட்டிகள் நிறைந்துவிட்ட சூழலில், மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.
''தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள் என திறன் சார்ந்தவற்றுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்?
* பெற்றோர் முதலில் தங்களின் தேர்வு பயத்தைப் போக்க வேண்டும். அவர்களின் பயமே குழந்தைகளுக்கும் கடத்தப்படுகிறது.
* உங்களின் குழந்தைகளை தயவுசெய்து மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். வேண்டுமெனில் கடந்த காலத்தோடு சுய ஒப்பீடு செய்து கொள்ளலாம்.
* அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மரபணு மற்றும் வளர்ப்பில்தான் குழந்தை உருவாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
* உங்கள் மகனால்/ மகளால் உங்கள் வயதுக்கான கற்றலைப் பின்பற்ற முடியாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
* குறைகளைத் தனியாக இருக்கும்போது சொல்லுங்கள். நிறைகளை எல்லோரின் முன்னாலும் பாராட்டிச் சொல்லுங்கள்.
* குழந்தைகளைக் குறைகூறும் போக்கு வேண்டாம். குறைகளைப் புரிந்துகொண்டு நீக்க முயலுங்கள்.
* பள்ளி முடித்து மகன் / மகள் வந்ததும் சாப்பிட்டாயா என்று கேளுங்கள். எத்தனை முறை சிரித்தாய் என்று விசாரியுங்கள்.
* குழந்தைகளின் நிறைவான தூக்கத்தை உறுதி செய்யுங்கள்; விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
* எந்தச் சூழலில் இருந்தும் மீண்டெழும் மன உறுதியைப் பயிற்றுவிக்க வேண்டும்.
மாணவர்கள் எப்படிப் படிக்க வேண்டும்?
* இரவு உறக்கத்துக்குப் பிறகு மூளை சுறுசுறுப்புடன் செயல்படும் என்பதால் புதிய பாடங்களைக் காலை நேரத்தில் படிக்க வேண்டும்.
* ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும் படிக்க மதிய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* இரவில் நன்கு படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கலாம்; எழுதிப் பார்க்கலாம்.
தேர்வு நாளில் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
* குளியலுக்குப் பிறகு மிதமான உணவை சாப்பிடக் கொடுங்கள்.
* தேர்வு நாளில் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* மாணவர்களுக்குத் தேவையான பென்சில், பேனா, அழிப்பான் உள்ளிட்ட அடிப்படையான பொருட்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
* துண்டு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைக் கொடுத்தனுப்புங்கள்.
* இது உலகப் போர் தினமல்ல; இன்னொரு நாளே என்று உற்சாகப்படுத்துங்கள்.
* முக்கியமாகக் கிளம்பும்போது பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்; திட்டாதீர்கள்'' என்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.
எதையுமே புத்திமதியாகச் சொல்லாமல், விளையாட்டாக எடுத்துச் சொல்லுங்கள். தேர்வும் மதிப்பெண்களும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள், பெற்றோர்களே!
- க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT