Published : 27 Feb 2020 04:21 PM
Last Updated : 27 Feb 2020 04:21 PM

வடகிழக்கு டெல்லியில் பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ 

டெல்லி வன்முறையின் எதிரொலியாக அதன் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து தேர்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு, சிபிஎஸ்இக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கிடையே 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.26 அன்று ஆங்கிலத் தேர்வும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'வெப் அப்ளிகேஷன்' மற்றும் 'மீடியா' தேர்வுகளும் நடைபெறுவதாக இருந்தன.

இதைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் நேற்றும் இன்றும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மேலும் இரண்டு நாட்களுக்கு பிப்.29 வரை பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில், ''கல்வி இயக்குநரகம் மற்றும் டெல்லி அரசின் வேண்டுகோளை முன்னிட்டு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அசெளகரியத்தைத் தவிர்க்க வேண்டி 29.02.2020 வரை டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அதேபோல தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவர்கள் சிலரால், தேர்வெழுத முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் புதிதாகத் தேர்வுகள் நடத்தப்படும். எனினும் மற்ற பகுதிகளில் தேர்வு வழக்கம் போல நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்தத் தேர்வு மையங்களில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x