Published : 27 Feb 2020 02:31 PM
Last Updated : 27 Feb 2020 02:31 PM
தேசிய அறிவியல் தினத்தையொட்டி புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஓவியம், கட்டுரை, சிறுகதை உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இயற்பியல் பேராசிரியர் சர் சி.வி.ராமன், ராமன் விளைவை 1928, பிப்ரவரி 28-ம் தேதி அறிவித்தார். அக்கண்டுபிடிப்புக்காக 1930-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக 1987-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதியன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை அறியவும், மக்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் தேசிய அறிவியல் தினம் உதவுகிறது. புதுவை அறிவியல் இயக்கம் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பல வருடங்களாக போட்டிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்திக் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டும் புதுவை அறிவியல் இயக்கம், புதுவை அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக 3 போட்டிகளை நடத்தி தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாட உள்ளது.
முதல் போட்டி
5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி. இப்போட்டியில் பங்குபெற விரும்புவோர் ‘பெண் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் ஏ4 அளவு வெள்ளைத் தாளில் (சார்ட் பேப்பர்) ஓவியம் வரைந்து அனுப்ப வேண்டும். ஓவியம் வண்ணமிடப்படலாம். ஓவியங்களுடன் பள்ளிப் படிப்புச் சான்றிதழ் அல்லது பள்ளித் தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.
இரண்டாவது போட்டி
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி. இப்போட்டிக்கு ‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் ஏ4 அளவு வெள்ளைத் தாளில் (ஒரு பக்கத்துக்கு 15 முதல் 18 வரிகள்) கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரையுடன் அவசியம் பள்ளிப் படிப்புச் சான்றிதழ் இணைத்து அல்லது பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.
மூன்றாவது போட்டி
புதுவை மக்கள் அறிவியல் அறியவும், அவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குகொள்ள விழைவோர் ‘யார் விஞ்ஞானி?’ என்ற தலைப்பில் எட்டு பக்கத்திற்கு மிகாமல், ஏ4 அளவு வெள்ளைத் தாளில் (ஒரு பக்கத்திற்கு 15 முதல் 18 வரிகள்) சிறுகதை எழுதி அனுப்ப வேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ள புதுவை வாழ் மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய படைப்புகளை மார்ச் 5-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய முகவரியையும், கைப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும். ஒவ்வோரு போட்டியிலும் வெற்றியாளர்கள் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்துப் போட்டியிலும் நடுவர்கள் முடிவே இறுதியானது.
படைப்புகள் வந்து சேரவேண்டிய முகவரி: சேகர், துணைத் தலைவர், புதுவை அறிவியல் இயக்கம், எண் 40, உடையார் வீதி, சண்முகப்பிரியா இல்லம், பாக்கமுடையான்பேட்டை, புதுச்சேரி-605008.
கைப்பேசி எண்: 9489771796; மின்னஞ்சல்: sundarasegar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT