Published : 27 Feb 2020 11:09 AM
Last Updated : 27 Feb 2020 11:09 AM
முழு ஆண்டு தேர்வுகள் முடிந்ததும் மாணவர்கள் பெருமூச்சு வீட்டு உல்லாசமாக விடுமுறையைக் கழிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், மகிழ்ச்சிக்கு இடையூறாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
உண்மையில் தேர்வு முடிவு மாணவனை/மாணவியை எதுவும் செய்யப் போவதில்லை. பெற்றோர் உட்பட சமூகம்தான் அவர்களுக்கு அழுத்தம் தர காத்துக்கொண்டு இருக்கிறது. ஆகையால், பெற்றோரே தேர்வு நேரத்தில் மட்டுமல்ல பொதுவாகவே நீங்கள் குழந்தை வளர்ப்பில் கவனத்துடன் செயல்படுவீர்களேயானால் உங்களுடைய குழந்தையின் எதிர்காலம் பிரகாசிக்க நீங்கள் துணை நிற்க முடியும்.
குழந்தைவளர்ப்பு தொடர்பாக வழிகாட்டும் உளவியலாளர்கள் முவைக்கும் சில ஆசோனைகள் இதோ:
* ஊக்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அல்லது தன்னுடைய குழந்தைக்கு தலைகனம் வந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசும் பழக்கம் பெரும்பாலான பெற்றோருக்கு உள்ளது. இந்தஅணுகுமுறை குழந்தையைச் சோர்வடைய செய்யுமே தவிர உங்களுடைய நோக்கத்துக்கு உதவாது.
* மற்றவர்கள் முன்னிலையில் குழந்தையை ஏளனமாகப் பேசுவது மிகவும் தவறு. இதனால் தாழ்வு மனப்பான்மையில் குழந்தைகள் சிக்குண்டு மீள முடியாமல் தவிப்பார்கள்.
* படிப்பிலோ அல்லது தனித்திறமையிலோ குழந்தை பெறும் வெற்றியை சமூக ஊடகங்களில் பதிவிடுவது, விருந்து வைத்துக் கொண்டாடுவது என்று ஊதிபெரிதாக்க வேண்டாம். இதன் மறுபக்கம் குழந்தையை கடுமையாகப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை ஒரு வேளை குழந்தை தோற்றுப்போனால் அதை சமநிலையில் எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் மீது பழிபோடுவது அல்லது தன்னை தானே சுருக்கிக்கொண்டு எல்லாவற்றிலும் இருந்து விலகிச் செல்வது போன்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவார்கள்.
* எதை கேட்டாலும் குழந்தைக்கு வாங்கிக்கொடுப்பது என்பது தவறான குழந்தைவளர்ப்பு முறையாகும். தனக்கு கிடைக்காதவை அனைத்தும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த தவறை பல பெற்றோர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைக்கு காலப்போக்கில் ஏமாற்றமே மிஞ்சும்.
* படிப்பு, தனித்திறன்கள், விளையாட்டு என அத்தனையிலும் குழந்தை வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தம் தருவது மிகத் தவறாகும். குருவி தலையில் பனங்காய் என்பது போல தாங்க முடியாத சுமையைக் குழந்தை மீது திணிப்பது அவர்களுடைய வளர்ச்சியை பாதிக்கும்.
* உணர்வுப்பூர்வமாக குழந்தைக்கு வலுசேர்க்கும் பெற்றோராகச் செயல்பட வேண்டும். குழந்தையுடன் போதுமான நேரம் செலவழிப்பதும் இதில் அடங்கும். குழந்தைக்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தை மறைக்க அவர்களுக்கு ஸ்மார்ட்போன், டேப் போன்ற சாதனங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு பிறகு‘டிஜிட்டல் போதை’யில் சிக்கிவிட்டார்கள் என்று புலம்புவதில் நியாயம் இல்லை. நீங்கள் குழந்தைக்கு வாங்கி தரும் பொருட்களை விடவும் மதிப்பில் உயர்ந்தது உங்களுடைய பொன்னான நேரத்தை அவர்களுடன் ஆக்கப்பூர்வமாக செலவழிப்பதே ஆகும்.
* குழந்தை செய்த தவறை குத்திக்காட்டிப் பேசுவது தவறு.
* மிரட்டல், பயமுறுத்தலின் வழியாகத்தான் குழந்தையை நல்வழிப்படுத்த முடியும் என்பது மடமை.
இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு குழந்தைகளை அவர்கள் போக்கில் சென்று வளர்த்தெடுத்தால் நிச்சயமாக எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். தொகுப்பு: ம.சுசித்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT