Published : 26 Feb 2020 01:01 PM
Last Updated : 26 Feb 2020 01:01 PM
சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்ற மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தின் பின்னால் உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி ஆசிரியர் இருந்துள்ளார்.
டெல்லி அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தில் மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்தோ, எழுத்துத் தேர்வுகள் குறித்தோ கவலை கொள்ள வேண்டியதில்லை. குழந்தைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்வதே இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.
டெல்லியில் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதைக் கற்பித்து வருகின்றனர். மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தால் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதை அறிந்த அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப், நேரடியாக வந்து இந்தப் பாடத்திட்டம் குறித்து அறிந்துகொண்டார்.
மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், இதற்கான காரணகர்த்தா, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஷ்ரவண் குமார் சுக்லா என்பது தெரியவந்துள்ளது.
2016-ம் ஆண்டு தற்காலிகப் பணியில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டவர், மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத் தயாரிப்புக் குழுவில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''2004-05 ஆம் ஆண்டில் மனித மதிப்புகள் குறித்து சத்தீஸ்கரில் நடந்த முகாமில் மணிஷ் சிசோடியாவைச் சந்தித்தேன். அப்போது அவர் அரசியலிலோ, அண்ணா ஹசாரே உடனோ இல்லை. ஆர்டிஐ குறித்த விவகாரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்ததை உணர்ந்தோம்.
2015-ல் டெல்லியில் அவர் அதிகாரத்துக்கு வந்தபிறகு, என்னை டெல்லிக்கு டெபுடேஷனில் அழைத்தார். அங்குள்ள பள்ளிகளில் மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தை உருவாக்கச் சொன்னார். அதற்காக 6 பேர் கொண்ட தயாரிப்புக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினேன்.
இந்தப் பாடத்திட்டத்துக்குத் தற்போது உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நேபாளம் இந்தப் பாடத்திட்டம் குறித்துக் கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகமும் இதை அமல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.
சாதி, மதம், இனம், இடம் தாண்டி அனைத்து மக்களும் மகிழ்ச்சிக்கு உரித்தானவர்கள். மகிழ்ச்சி அனைவருக்கும் சமமே. இதைத்தான் எங்கள் பாடத்திட்டம் வலியுறுத்துகிறது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இதன் மகத்துவம் புரியும்'' என்று ஷ்ரவண் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT