Published : 26 Feb 2020 10:08 AM
Last Updated : 26 Feb 2020 10:08 AM

டெல்லி அரசு பள்ளியில் மகிழ்ச்சியான வகுப்பறை: மெலானியா டிரம்பை அசத்திய மாணவர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா, டெல்லியில் உள்ள அரசு பள்ளிக்கு நேற்று சென்றார். மாணவர்களுடன் நடந்த உரையாடலின்போது, ஒரு மாணவியை ஆரத்தழுவிக் கொண்டார்.படம் : பிடிஐ

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு, நேற்று டெல்லிக்கு வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று கவுரவிக்கப்படும் அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா, டெல்லிஅரசு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

டெல்லி தெற்கு மோடி பாக் பகுதியில் உள்ள சர்வோதயா இருபாலர் பயிலும் உயர்நிலைப் பள்ளியில், ‘மகிழ்ச்சியான வகுப்பறை திட்டம்’ என்ற திட்டம் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுவதற்காக மெலானியா நேற்று காலை பள்ளிக்கு வந்தார்.

அப்போது, பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை அணிந்து மெலானியாவை வரவேற்றனர். மேலும், மெலானியாவுக்கு ஆரத்தி எடுத்த மாணவிகள், அவருக்கு திலகமிட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட மெலானியா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களுடன் புகைப்படம்

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலை நிகழ்ச்சிகளை உற்சாகமாகக் கண்டு களித்த மெலானியா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே, அரசு பள்ளி சார்பாக மெலானியாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் மத்தியில் பேசிய மெலானியா கூறுகையில், “இந்தியர்கள் அனைவரும் மிகவும் கனிவானவர்கள். பள்ளிக்கு வந்த தன்னை பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றதற்கு நன்றி. இந்தியாவின் வரவேற்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்றார்.

கேஜ்ரிவால் மகிழ்ச்சி

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெலானியா டிரம்ப் எங்கள் பள்ளியின் மகிழ்ச்சியான வகுப்பில் கலந்து கொண்டது எங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் டெல்லிவாசிகளுக்கு ஒரு சிறந்த நாளாகும். பல நூற்றாண்டுகளாக, உலகுக்கு ஆன்மீகத்தை இந்தியா கற்பித்திருக்கிறது.

எங்கள் பள்ளியில் இருந்து மெலானியா மகிழ்ச்சியை பெறுவார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x