Published : 25 Feb 2020 12:40 PM
Last Updated : 25 Feb 2020 12:40 PM
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப், டெல்லி அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோர் இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். நேற்று அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து மெலானியா இன்று தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார். அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை வரவேற்றனர். பள்ளியில் 2,299 மாணவர்கள், 80 ஆசிரியர்கள் மற்றும் 50 ஊழியர்கள் உள்ளனர்.
ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில், அரசுப் பள்ளிகளில் ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரசுப் பள்ளிகளில் தியானம், யோகா, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றை மெலானியா நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் மகிழ்ச்சியான பாடத்திட்டம் குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக பள்ளிக் குழந்தைகளுடன் மெலானியா நேரம் செலவிட்டார்.
முன்னதாக, டெல்லி அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான பாடத்திட்டம் குறித்து அறிந்துகொண்ட மெலானியா, அவர்களை நேரில் சந்தித்து உரையாட விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT