Published : 25 Feb 2020 10:23 AM
Last Updated : 25 Feb 2020 10:23 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், மதிப்பெண் சான்றிதழில் ‘பெயில்’ என்பதற்கு பதிலாக மறுத்தேர்வுக்கு தகுதியானவர் என்று குறிப்பிடப்பட உள்ளது.
மகாராஷ்டிர பள்ளிக் கல்வித் துறைசார்பாக மார்ச் மாதம் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுநடைபெற உள்ளது. நாடு முழுவதும்பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ‘பெயில்’ (Fail) என்று குறிப்பிடும் நடைமுறை உள்ளது. இந்நிலையில், அதை மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றி அமைத்துள்ளது.
அதாவது, ‘பெயில்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக மறுத்தேர்வுக்கு தகுதியானவர் (Eligible for Re-exam) என்று மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாண வர் மறுத்தேர்விலும் தேர்ச்சி பெற வில்லை என்றால், ‘திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மட்டும் தகுதியானவர்’ என்றும் குறிப்பிடப்பட உள்ளது.
மறுத்தேர்வானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். அதேபோல், பிளஸ் 2 வகுப்பில் மூன்று அல்லது அதற்கு மேலான பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், மதிப்பெண் சான்றிதழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மட்டும் தகுதியானவர் என்று குறிப்பிடப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:
தேர்வு பயத்தால் தேர்வு நடக்கும் முன்பாகவோ, முடிவுகளுக்கு பயந்தோமன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானவை.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு மனவருத்ததை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோல்வி என்ற சொல்லுக்கு எதிர்மறை அர்த்தங்கள் உள்ளன. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தாலே அவர்களின் வாழ்க்கையிலேயே தோல்வி அடைந்து விட்டதாக மாணவர்கள் எண்ணிவிடக் கூடாது. மாணவர்களிடையே நேர்மறை சிந்தனையை வளர்ப்பதற்கும், அவர்களுடைய திறமைகளைத் தொடந்து ஊக்குவிப்பதற்கும், அவர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பதற்கும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு வர்ஷா தெரிவித்தார்.
முன்னதாக, 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்கள் திறன் மேம்பாட்டுக் கல்வியைத் தொடர ஊக்குவிக்கப்படுவார்கள் என்று திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT