Published : 18 Feb 2020 06:55 PM
Last Updated : 18 Feb 2020 06:55 PM

எளிய முறையில் அறிவியல்: அரசுப் பள்ளிகளுக்குக் கை கொடுக்கும் ஜீரோ லேப் திட்டம்!

எளிய முறையில் மலிவு விலையில் அறிவியல் ஆய்வகப் பொருட்களை உருவாக்கி, அரசுப் பள்ளிகளுக்குக் கை கொடுக்க ஜீரோ லேப் எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் செயல்வழிக் கற்றலை மேம்படுத்த இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வகுப்பறைக்குள்ளேயே ஆய்வகம் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கற்றல் நிகழ்த்தப்படுகிறது.

ஏராளமான பொறியாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், களப் பணியாளர்களின் ஆலோசனைகளைக் கொண்டு க்யூரியோ கிட்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் ஜீரோ லேப் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அண்மையில் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

எளிமையான அறிவியல்
இதுகுறித்து க்யூரியோ கிட்ஸ் நிறுவனர் நாகலட்சுமி கூறும்போது, ''பொதுவாக செயல்முறைக் கற்றல் என்றாலே நம் அனைவருக்கும் ஆய்வகம் என்றுதான் நினைவுக்கு வரும். தரமான ஆய்வகத்தை உருவாக்குவது என்பது பொருளாதார ரீதியில் அதிக செலவை ஏற்படுத்தும். இதனால் செலவைக் குறைத்து எளிமையான வகையில் அறிவியலைப் புரிய வைக்க முடிவெடுத்தோம்.

ஆய்வகமே இல்லாமல் வகுப்பறைக்குள் ஆய்வக உணர்வையும் கற்றல் அனுபவத்தையும் எடுத்து வருவதுதான் ஜீரோ லேப் திட்டம். மலிவான விலையில் இதை அரசுப் பள்ளிகளுக்கு உருவாக்கிக் கொடுக்கிறோம். இதன் மூலம் பாடத்திட்டத்தில் இருக்கும் கற்றல் முறைகளை வகுப்பறைக்குள் எடுத்து வருகிறோம்.

இதனால் கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அதிகம் பயனடையும். ஆய்வுப் பொருட்களைக் கைகளால் தொட்டுப் பார்த்துப் படிப்பதால், வெறும் தகவலாக மட்டும் இல்லாமல், புரிதலுடனும் ஈடுபாட்டுடனும் படிப்பர். அதேபோல நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் அதிகம் நடப்பதில்லை. அங்கு ஆய்வகம் இருந்தால் கண்ணால் மட்டுமே அவற்றைப் பார்க்கின்றனர். ஆனால் ஜீரோ லேப் மூலம் நாங்கள் உருவாக்கித் தரும் பொருட்களை அவர்கள் பயமின்றிக் கையாள்கின்றனர்.

பத்தில் ஒரு பங்கு செலவு
ஆய்வகத்துக்கென தனி அறை, மேடை, கருவி ஆகியவற்றை இவற்றுக்கு உருவாக்க வேண்டியதில்லை. இதனால் கட்டமைப்பு வசதி மிச்சமாகிறது. ஆய்வகத்துக்கு ஆகும் செலவில் தோராயமாக பத்தில் ஒரு பங்கு மட்டுமே ஜீரோ லேபுக்கு ஆகிறது. முதற்கட்டமாக இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் உள்ள முக்கியமான 50 கருத்துருக்களுக்கு, ஆய்வுப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு மனித எலும்புக் கூடு வடிவத்தின் விலை தரத்தைப் பொறுத்து ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை இருக்கும். அதை நாங்கள் 500 ரூபாய்க்குத் தயாரித்து வழங்குகிறோம். கீழே விழுந்தால் எளிதில் உடையாத வகையில் இவற்றை உருவாக்குகிறோம். இதனால் அதிக விலை கொண்ட பொருட்களைக் கையாள்வதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சம் உண்டாவதில்லை.

அரசு அளிக்கும் ஆய்வகப் பொருட்களையே நாங்கள் தருவதில்லை. எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை வழிகாட்டலுக்கான புகைப்படங்களுடன் இவற்றைத் தயாரிப்பதால், மாணவர்களால் இவற்றை எளிதில் பயன்படுத்தி, அறிவியலை ஆர்வத்துடன் படிக்கின்றனர்'' என்கிறார் நாகலட்சுமி.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x