Published : 15 Feb 2020 02:48 PM
Last Updated : 15 Feb 2020 02:48 PM
தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுடனும் ஒப்பிடும்போது இந்த முறை பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தரமான கல்வியைத் தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறும் தமிழக அரசு, தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 30,104 ஆகக் குறைந்து, அவர்களில் 29,740 குழந்தைகள் தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கவலை தரும் சூழலில் இருக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் எதைக் காட்டுகிறது? என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்:
இது ஒரு வழக்கமான பட்ஜெட்டாகத்தான் உள்ளது. செலவுகள் அதிகரித்ததால், நிதி ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. பட்ஜெட் அறிவிப்பு, சமமான கற்றல் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறதா, அருகமைப் பள்ளிகளை அதிகப்படுத்துகிறதா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியுள்ளதா, கற்றல் திறனை அதிகரிக்கிறதா, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்க சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அரசு ஆலோசனை பெற்றதா?
அரசின் கொள்கையில் இடம்பெறாத சமமான கற்றல் வாய்ப்பு, பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான தேவை குறித்து எந்த விவாதமும் இங்கு எழுப்பப்படவில்லை. மாணவர்களுக்குத் தேர்வில் ஒரே கேள்வித்தாளை வழங்கும் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே அளவிலான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? புதிதாக ஒன்றுமில்லாத பட்ஜெட் அறிவிப்பால் பள்ளிக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன்.
அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்கவைப்பதை அரசு உறுதி செய்வதாகவும் இதற்காக 1,018.39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்கான கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுவதை எப்படி அணுகுவது?
தியாகராஜன், ஜாக்டோ ஜியோ நிர்வாகி
பட்ஜெட்டில் ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பழைய ஓய்வுதியத் திட்டம் குறித்த ஸ்ரீதர் கமிட்டி, ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் கமிட்டி ஆகியவை பற்றி எதுவும் பேசப்படவில்லை.
பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த முறை கடந்த ஆண்டைவிட ரூ.5,424 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பள்ளிகளைத் தரம் உயர்த்தவோ, ஆசிரியர் நியமனங்களுக்காகவோ வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக சுமார் ரூ.304 கோடியை அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தச் செலவிட்டிருக்கலாமே.
ஆசிரியர் - மாணவர் விகிதத்தைப் பேசும் நாம், வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வரவேண்டும். இதைவிட்டு இலவசங்களைக் கொடுத்தால் மட்டுமே மாணவர்களைத் தக்க வைக்கலாம் என்ற தவறான புரிதலை அரசு கொண்டிருக்கிறது. இலவசங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் அதுமட்டுமே மாணவர்களை அரசுப் பள்ளிகளில் தக்க வைக்காது. தரமான கல்வி, வகுப்புக்கு ஓராசிரியர், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே இலவசங்களுக்கு ஒதுக்கும் கோடிகள் பயனுள்ளதாய் மாறும்.
அடுத்ததாக, அரசுப் பள்ளிகளில் 3,200-க்கும் மேற்ட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவர் என்று அரசு தெரிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு எதுவும் பேசவில்லை. இதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கும்; கல்வித் தரமும் உயரும். அதேபோல ஏற்கெனவே பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்று தெரியவில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி ஆசிரியை
ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தக் கல்வியாண்டிலேயே நிறைய முன்னெடுப்புகள் நடந்துள்ளன.
எனினும் மொத்த ஜிடிபியில் கல்விக்கான தமிழ்நாட்டு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்பதற்கு முக்கியக் காரணம், கல்விக்கு அவர் அளித்த முக்கியத்துவம். மொத்த பட்ஜெட்டில் 26% கல்விக்காக ஒதுக்கினார். நம்மால் அவ்வளவு செய்ய முடியாவிட்டாலும், கல்விக்காக இன்னும் அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்நிலையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு, தமிழகத்துக்கு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. பிஹார் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு. எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்றத் தாழ்வுகளைக் களையவும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்கலாம். ஆனால் தமிழக சூழல் அப்படியில்லை. அருகமைப்பள்ளிகள் அதிகமாக உள்ளன. 1 கி.மீ. தூரத்திலேயே இரண்டு பள்ளிகள் கூட இருக்கும்பட்சத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு எதற்கு, அவர்களுக்கு எதற்கு 644.69 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
சேர்க்கை குறைந்துவிட்டது என்று கூறி அரசுப் பள்ளிகளை மூடும் சூழலில் அந்தப் பணத்தைக் கொண்டு பள்ளிகளை மேம்படுத்தலாமே. புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கலாமே. இலவசங்கள் அவசியம்தான். ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைவருக்கும் அது தேவைப்படுவதில்லை. தேவையானவர்களைக் கண்டறிந்து இலவசத்தைக் கொடுத்து, மிச்சமாகும் பணத்தை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT