Published : 13 Jan 2020 12:28 PM
Last Updated : 13 Jan 2020 12:28 PM
பி.எம்.சுதிர்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு காலத்தில் சொத்தையாகவே இருந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளெல்லாம் இந்தியாவை துவைத்து எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், அதை மாற்ற வந்தவரைப் போல் இந்திய அணிக்குள் நுழைந்தார் கபில்தேவ்.
1970-களின் இறுதிக் காலத்தில் ஹரியாணா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் நிறைய விக்கெட்களை எடுத்ததால், இந்திய அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார் கபில்தேவ். இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால், அதை வைத்து டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்று விடலாம் என்று நம்பினார் கபில்தேவ்.
இந்திய அணியின் அப்போதைய தேர்வுக்குழு தலைவரான ராஜ்சிங் துங்கர்பூரின் வீட்டைக் கண்டுபிடித்து, அவர் முன் போய் நின்றார். அந்தச் சமயத்தில் துங்கர்பூர் அவசர அவசரமாக தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
கபில் தேவிடம் பேச அவருக்கு நேரமில்லை. “அவசரமாக வெளியில் செல்கிறேன். வந்த பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு செல்லும் அணியை தேர்வு செய்யத்தான் அவர் செல்கிறார் என்பதை அறியாத கபில் தேவும், அவர் வந்தபிறகு பேசலாம் என்று அங்குள்ள கேட்டின் அருகில் காத்திருந்தார்.
மதியத்தில் வீட்டை விட்டு கிளம்பிய துங்கர்பூர், அணியை தேர்வு செய்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் வந்தார். அவருக்காக அப்போதும் கபில்தேவ் காத்திருந்தார். வாட்ச்மேன் மூலம் இத்த கவலை கேள்விப்பட்ட துங்கர்பூர், கபில்தேவை அழைத்து வந்த விஷயத்தைக் கேட்டார். இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என்று கபில்தேவ் கேட்டுக் கொண்டர்.
கபில்தேவைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த துங்கர்பூரின் மனதை, அவர் தனக்காக பல மணி நேரம் காத்திருந்த சம்பவம் உருக்கியது. உடனடியாக கிரிக்கெட் வாரிய தலைவருக்கு போன் போட்டு, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியினருடன் கபில்தேவின் பெயரையும் சேர்க்கச் சொன்னார். இப்படி
போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ், இந்த தொடரில் சிறப்பாக ஆட அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகார பூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். இதில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT