Published : 02 Jan 2020 08:03 PM
Last Updated : 02 Jan 2020 08:03 PM

அன்பாசிரியர் 49: ஞானப்பிரகாசம்- அன்றாட வாழ்வுடன் அறிவியலைத் தொடர்புபடுத்தி ஆர்வத்துடன் கற்பிக்கும் ஓவியர்!

சமன்பாடுகளும் வரைபடங்களும் பயமுறுத்த அறிவியல் என்றாலே எட்டிக்காயாகக் கசப்பை உணர்ந்த மாணவர்கள் ஏராளம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிமையான உதாரணங்களைக் கூறி சுவாரசியமாக அறிவியலைக் கற்பிக்கிறார் ஆசிரியர் ஞானப்பிரகாசம்.

அஸ்தினாபுரம் உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் பசுமை காப்பாளர், ஓவியர், யோகா வல்லுநர், கானா பாடகர் என்று பன்முகம் காட்டுகிறார். சொற்களுக்கு வலிக்காமல் மென் குரலில் தன் பணிகளை விளக்குகிறார்.

''இயல்பிலேயே கூச்ச சுபாவம் மிக்கவன் நான். அதனாலேயே ஒரு மாணவனாகக் கேள்வி கேட்க பயந்திருக்கிறேன். ஆனால் அதை என் மாணவர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பிலும் நிறையக் கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லிதான் பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

பாடல் வழிக் கற்றல்
2004-ல் பனையாண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். பாடல்கள் வழியாகக் கற்பித்தலை நிகழ்த்தியதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நீராவிப்போக்கு குறித்த பாடத்துக்கு ''தன்னானே-நானேநன்னே' என்ற மெட்டில், ''தாவரங்கள் வேரின் மூலம் நீரினையே உறிஞ்சுதம்மா, நீரின் மூலம் தாதுக்கள் தாவரத்துக்குக் கிடைக்குதம்மா.. சிறிதளவு நீரை மட்டும் தாவரங்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ள நீரை எல்லாம் நீராவி ஆக்குதம்மா.. இதுதான் நீராவிப் போக்கு உன் சந்தேகத்த நீக்கு!'' என்று பாடுவேன். மாணவர்களையும் பாடச் சொல்வேன். இதன்மூலம் ஆர்வத்துடன் பாடம் கற்றவர்கள் பாடிய பாடத்தை, மறக்காமல் இருந்தனர்.

2 ஆண்டுகளில் புலியணி கிராமத்துக்கு மாறுதல் கிடைத்தது. தாவரங்கள் குறித்த பாடத்துக்கு களத்துக்கே நேரடியாக அழைத்துச் சென்று கற்பித்தேன். ஒருமுறை நெல் நாற்று நடுவது தொடர்பான அனைத்துப் பணிகளையும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வயலுக்குச் சென்று கற்றோம். 'பாலைவனத் தாவரங்கள்' என்ற பாடத்துக்கு பாறை, கற்கள், கள்ளிச்செடி ஆகியவற்றைக் கொண்டு, பள்ளியிலேயே சிறிய மலை அமைத்தோம். மாணவர்கள் அதைச் சுற்றிவந்து பாடம் கற்பர். அப்போது படித்த பரணிதரன் என்னும் மாணவன், இப்போது பொறியாளர். இன்னும் 'பள்ளி மலை'யை ஞாபகம் வைத்து சமீபத்தில் பேசினார்.

துணி பேனர் பாடங்கள்
அப்போது ரயிலில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். சார்ட்டில் வரைந்து எடுத்துச் செல்லும்போது சக ஆசிரியர்கள் கிண்டல் செய்தனர். யோசித்து துணி பேனரை உருவாக்கினேன். காடாத்துணியை வாங்கி அக்ரிலிக் பெயிண்டிங் மூலம் நானே அறிவியல் படங்களை வரைந்தேன். கைக்குட்டை போல மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.

அந்த ஓவியங்கள் இன்னும் அழியாமல் நிலைத்திருக்கின்றன. அதைக் கொண்டுதான் இன்றுவரை 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கிறேன். கரும்பலகையில் வரையும்போது மாணவர்களுக்கு ஏற்படும் கவனச்சிதறல் இதனால் தவிர்க்கப்படுகிறது. நேரமும் மிச்சமாகிறது. வெள்ளை சாக்பீசில் வரைவதைவிட வண்ணமயமாக இருப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். மாணவர்களின் கவனத்தை இதன் மூலம் தொடர்ந்து தக்கவைக்க முடிகிறது.

கிராமம் என்பதால் சில மாணவர்கள் குளிக்காமலேயே பள்ளிக்கு வருவர். சோப், துண்டு வாங்கி அவர்களைக் குளிக்க வைத்திருக்கிறேன். 'சாப்டீங்களா?' என்று கேட்டுதான் ஒவ்வொரு நாளும் வகுப்பெடுப்பேன். இல்லாவிடில் அருகில் இருக்கும் உணவகத்தில் வாங்கிக் கொடுப்பேன். வாடிய முகமாகத் தெரிந்தால் அழைத்து விசாரிப்பேன். இதனாலேயே மாணவர்களுடன் நெருக்கம் அதிகமானது.

வெல்கம் சார்!
ஒருமுறை வயிற்றில் அறுவைசிகிச்சை செய்து, படுத்த படுக்கையாக இருந்தேன். ஒரு மாதம் கழித்துப் பள்ளிக்குச் சென்றேன். பிரதான சாலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் பள்ளி இருந்தது. அந்த 1 கி.மீ. முழுவதும் 'Welcome Science Sir' என்று மாணவர்கள் சாக்பீஸால் எழுதியிருந்தனர். அப்படியே நெக்குருகி நின்ற தருணம் அது'' என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் ஞானப்பிரகாசம்.

புலியணி பள்ளியில் பணிபுரியும் போது அடிப்படைக் கணினி அறிவைப் பெற்றிருந்த அவர், 2010-ல் அஸ்தினாபுரம் நடுநிலைப்பள்ளிக்கு வரும்போது காணொலியை சொந்தமாக உருவாக்கி, எடிட் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தார். அறிவியல் பாடங்களைக் கற்பிக்க தனது ஓவியங்களைப் பயன்படுத்தும் அவர், இயங்கும் பொருள் குறித்த பாடங்களுக்கு வீடியோக்களைப் பயன்படுத்துகிறார். இதனால் மாணவர்கள் அறிவியலை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்கிறார்.

'ஏன் எறும்பு வரிசையில் செல்கிறது?', 'ஏன் நாம் எல்லோருமே சுவாசிக்கிறோம்?', 'சூரியன் எப்படி ஆக்ஸிஜன் இல்லாமலே எரிகிறது?' என்று தன் மாணவர்கள் கேள்வி கேட்டதைப் பெருமிதத் தருணமாக எண்ணிப் பூரிக்கிறார். மேலும் பேசுபவர், ''கேள்விகள் கேட்க ஊக்குவிப்பதாலேயே நானும் நிறையக் கற்றுக் கொள்கிறேன்.

விளக்கேற்றுவது ஏன்?
அறிவியலுடன் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபடுத்துவதால், மாணவர்கள் உற்சாகமாகப் பாடம் கற்கின்றனர். உதாரணத்துக்கு ஒளி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். வீட்டில் விளக்கேற்றுவது ஏன்? என்று மாணவர்களிடம் கேட்டபோது 'லட்சுமி வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருக்க!' என்றனர். ஒரு விளக்கு எரியும்போது அந்த இடத்தில் ஆக்ஸிஜன் பரவி, வெற்றிடம் உருவாகும். அதை நிரப்ப வெளியில் இருந்து ஆக்ஸிஜன் வீட்டுக்குள்ளே வரும். பின்வாசல் திறந்திருந்தால் அப்படியே வெளியே போய்விடும். ஆக்ஸிஜன் வீட்டுக்குள்ளேயே பரவவே பின் கதவை மூடி விளக்கேற்றும் வழக்கம் வந்தது என்று அறிவியலை விளக்கினேன்.

அதேபோல ஒலி, ஒளி பயணிக்கும் விதம் குறித்து சொல்லிக்கொடுக்கும்போது ஒளி நேராகப் பயணிப்பதால் சுவரைத் தாண்டிச் செல்வதில்லை. ஆனால் வளைந்து, நெளிந்து செல்லும் ஒலியால், அதன் சப்தம் சுவர்களைத் தாண்டியும் கேட்கிறது. இயற்கையின் இந்தப் பண்பால்தான் உலகில் ரகசியங்கள் காக்கப்படுகின்றன என்றபோது மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டனர்'' என்கிறார்.

அணு, அணுகுண்டின் பாதிப்பு குறித்து சொற்களைவிட வீடியோவில் விளக்கினால் மாணவர் மனதில் சுலபமாகப் பதியும் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாணவர்களை அறிவியல் குறித்துப் பேசவைத்துத் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். கானா பாடல்கள் மூலமும் கற்பிப்பதாகச் சொல்கிறார் அன்பாசிரியர் ஞானப்பிரகாசம்.

''வைட்டமின், அணு, அலகுகள் (Units) ஆகியவற்றைப் பாடல்கள் என்னும் புது வடிவத்தில் அளிக்கிறேன். சமன்பாடுகளை அப்படியே தருவிக்காமல், ஏன் இந்த வினை நிகழ்கிறது, எப்படி இது நிகழ்கிறது என்று சொல்லியே கற்பிப்பேன். இணையத்தில் கிடைத்த வீடியோ மூலம் தனிம வரிசை அட்டவணையைக் கற்பிக்கிறேன். தொடர், தொகுதி ஆகியவற்றை கிடைமட்டமாக 7 தொடர்(வண்டிகள்), மேலிருந்து கீழாக தொங்கும் 18 தொகுதி (தோரணங்கள்) என்று கற்பிக்கும்போது அவர்களால், மறக்காமல் இருக்க முடிகிறது.

மழை வரும்போது மண் வாசனை
மண்ணுக்கெனத் தனி மணம் இல்லை. மழை பெய்யும்போதும் மண்ணைக் கிளறும்போதும் மண் வாழ் பாக்டீரியாவான Streptomyces, Geosmin என்ற வாசனையை வெளியிடுகிறது. அதனால்தான் மண் வாசனை ஏற்படுகிறது என்று சொல்லிக்கொடுக்கும்போது பாக்டீரியாக்களின் மற்ற செயல்பாடுகள் குறித்தும் ஆர்வத்துடன் மாணவர்கள் கேட்டறிகின்றனர்.

அறிவியல் தாண்டி...
என்ஜிஓ உதவியுடன் 200 புங்கை மரங்களைப் பள்ளியைச் சுற்றிலும் நட்டிருக்கிறோம். ஆரம்பத்தில் விடுமுறை நாட்களிலும் நானே வந்து தண்ணீர் ஊற்றிவிடுவேன். இப்போது தனி ஆள் இருக்கிறார். அதேபோல 2013-ல் பள்ளிக்கு முன்பாக நட்ட செடிகளை இன்று வரைக்கும் நானே வெட்டிப் பராமரிக்கிறேன். மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜன், உயிரினங்களுக்கு அது அளிக்கும் வாழிடம் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்.

பள்ளியில் பாலின விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். நேரம் கிடைக்கும்போது மாணவர்களுக்கு யோகாவும் கற்பிக்கப்படுகிறது. மெல்லக் கற்கும் மாணவர்கள் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர். அதை உணர்ந்து அவர்களுக்குத் தனிக்கவனம் செலுத்திக் கற்பித்து வருகிறோம்.

அறிவியலில் அடுத்த முக்கியப் பிரச்சினை படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவது. எளிய, சுவாரசிய உதாரணங்களுடன் படிப்பது, அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்பது ஆகியவற்றால் மறதி ஏற்படுவதைத் தடுக்க முடியும்'' என்கிறார் அன்பாசிரியர் ஞானப்பிரகாசம்.

தொடர்புக்கு: ஆசிரியர் ஞானப்பிரகாசம்- 99622 35243

-க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x