Published : 05 Nov 2019 12:18 PM
Last Updated : 05 Nov 2019 12:18 PM

குட்டிக் கதை 10: பெற்றோருக்குத் தெரியாமல் எதுவும் செய்யாதே!

“டேய் கவியரசு, தெருவில அரைக்கீரை விக்குது பாரு, போய் ஒரு கட்டு வாங்கி வா”.

“சரி மா”.

“அம்மா, ஒரு கட்டு 15 ரூபாயாம். வாங்கிடவா?”.

“ம்ம், வாங்கிட்டு வா”.

“என்னம்மா, சில்லறை போட்டு வைக்கும் டப்பாவில 10 ரூபாய்தான் இருக்கு”.

“நேத்து பார்த்தேனே, 15 ரூபாய் இருந்துதே, உன் தம்பி புவியரசு கிட்ட கேளு”.

“அவன் எங்கன்னு தெரியலைம்மா, சரி நான் அப்பாவோட சட்டைப் பையில இருந்து எடுத்துக் கொடுத்திடறேன்”.

“கவி, எனக்கு என்னமோ சின்னவன் புவி மேலதான் சந்தேகமா இருக்கு, ஒரு வாரமாகவே சில்லறை டப்பாவில தினமும் ரெண்டு, மூணு ரூபாய் குறையற மாதிரி தெரியுது”.

“அவன் உங்ககிட்ட சொல்லிட்டு எடுத்தாக்கூட பரவாயில்லை, ஆனா தெரியாம ஏன் எடுக்கறான்னு தெரியலையே அம்மா”.

“இந்த விஷயம் உங்க அப்பாவுக்குத் தெரியறதுக்குள்ளே எப்படியாவது அவனுக்குப் புரிய வச்சிடணும்”.

“நான் ஒரு ஐடியா சொல்றேன், அது மாதிரி செய்ங்க மா” என்று கூறிய கவியரசு, அம்மாவிடம் ரகசியமாக ஏதோ சொன்னான்.

“சரி, அப்படியே செய்யலாம்” என்றார் அம்மா.

சற்று நேரத்திற்குப் பிறகு புவியரசு வீட்டுக்கு வந்தான்.

“அம்மா, பசிக்குது. குடிக்க ஏதாவது தாங்க”.

காபி போட்டு எடுத்து வந்தபோது அம்மா திடீரென்று கீழே விழுந்தார். கை, கால்கள் ‘விலுக், விலுக்’என்று இழுத்துக் கொண்டன.

“என்னம்மா, என்ன ஆச்சு, வலிப்பு வந்த மாதிரி தெரியுதே.. இப்போ நான் என்ன செய்வேன்” என்றவாறு “கவி இங்க வாடா, அம்மாவுக்கு என்னமோ பண்ணுதுடா” என்று அழுதுகொண்டே கூறினான்.

உள்ளே படித்துக் கொண்டு இருந்த கவியரசு வேகமாக ஓடி வந்தான். அம்மா அருகில் அமர்ந்து என்ன என்று பார்த்தான்.

“டேய், அம்மாவுக்கு ‘ஃபிட்ஸ்’ வந்த மாதிரி தெரியுது, நீ போய் ஏதாவது சில்லறை எடுத்துட்டு வா, உடனே பல்லுக்கு இடையில் வைக்கணும். இல்லன்னா, நாக்கை கடிச்சுக்குவாங்க, அதற்குள் நான் போய் ஒரு சாவி எடுத்துக் கையில தரேன்” என்று பதற்றத்துடன் சொன்னான்.

புவியரசு வேகமாய்ப் போய் சில்லறை டப்பாவில் பார்த்தான். அதில் சில்லறை எதுவும் இல்லை. வேறு எங்கிருந்து உடனடியாக சில்லறை எடுப்பது என அவனுக்குப் புரியவில்லை.

“டேய் கவி, டப்பாவில் சில்லறை இல்லை. நான்தான் அதுக்குக் காரணம். யாருக்கும் சொல்லாம அப்பப்போ 2, 3 ரூபாய் எடுத்துக்கிட்டு போய் ஏதாவது வாங்கி சாப்பிடுவேன், அய்யோ, இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே?”

“சமையல் அறையில சர்க்கரை டப்பா பக்கத்துல இருக்கற ஒரு பாக்ஸ்ல இருக்கு , போய் எடுத்துக்கிட்டு வா” என்று கூறினான் கவியரசு.

வேகமாக ஓடிச் சென்று அங்கிருந்து ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொண்டு வந்தான். நாணயத்தை வைத்து, சாவியையும் கொடுத்த பிறகு அம்மாவிற்கு சற்று சரியாகிவிட்டது.

“அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. யாருகிட்டயும் சொல்லாம நான் காசு எடுத்துட்டுப் போனேன். இப்போ அவசரத்துல ஒண்ணுமே புரியாம தவிச்சுப் போய்ட்டேன் மா, இனி நான் உங்களுக்குத் தெரியாம எதுவும் செய்ய மாட்டேன் மா”.

“சரி புவி, நான் அம்மாவைப் பார்த்துக்கறேன், நீ தெருக்கோடியில இருக்கற நம்ம டாக்டர் மாமாவைக் கூட்டிக்கிட்டு வா”.

அவன் சென்றவுடன் “அம்மா, பாருங்க, இப்போ எப்படி உண்மையை ஒத்துக்கிட்டான். அது சரி, டாக்டர் உங்க தம்பிதானே, அவர் வந்ததும் தனியா கூட்டிக்கிட்டுப் போய் உண்மையைச் சொல்லிடுங்க. ஆனா புவியரசு கிட்ட மட்டும் எதுவும் சொல்லாதீங்க. தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சு அவன் திருந்திடுவான்” என்றான் கவியரசு.

“இருந்தாலும், குழந்தைகிட்ட பொய் சொல்லிட்டமேன்னு வருத்தமா இருக்கு”.

“அம்மா, வருத்தப்படாதீங்க.. ‘நன்மை பயக்கும்னா, அதுக்காகப் பொய் கூடச் சொல்லலாம்’னு திருவள்ளுவரே சொல்லி இருக்கார்”.

“நீ சொல்றதும் சரி தான், எப்படியோ அவன் தப்பைப் புரிஞ்சுக்கிட்டான், அதுவே போதும்” என்றார் அம்மா.

நீதி: எதைச் செய்வதாய் இருந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிட்டுத்தான் செய்ய வேண்டும்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x