Published : 22 Oct 2019 01:24 PM
Last Updated : 22 Oct 2019 01:24 PM
கதைகளின் வழியே, குழந்தைப் பருவத்திலேயே நீதியைப் புகட்டிச் சென்றவர்கள் நம்முடைய முன்னோர்கள். அவ்வழியில், குட்டிக் கதைகள் வழியாகவும் பழமொழிக் கதைகள் வழியாகவும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் நற்பண்புகளை சொல்லிக் கொடுக்கிறார் ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலாவல்லி அருள்.
இனி கதைக்குள் செல்வோமா?
பத்தாம் வகுப்புக்கு தமிழாசிரியர் பாடம் நடத்த வந்தார்.
“என்ன பிள்ளைகளா, இன்றைக்கு “‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழியை உணர்த்தக்கூடிய கதை ஒன்றை ஒவ்வொருவரும் சொல்லணும். சரி, இப்போ யார் முதல்ல சொல்லப் போறீங்க?”.
“கதையை விட போன வாரம் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியே இருக்குங்க ஐயா” என்று சொன்னான் வருண்.
“அப்படியா, சரி இங்க வந்து சொல்லு”
“சென்ற வாரம் புதன்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு போய்ட்டு இருந்தோம் ஐயா. அப்பொழுது அவசரமாக வந்து கொண்டிருந்த ஒருத்தர் அரசு மருத்துவமனைக்கு எப்படி போகணும்னு வழி கேட்டார். அவர்கிட்ட தவறான வழியை நம்ம கரண் சொல்லி அனுப்பிட்டான்.
“டேய், எளிதா போகக் கூடிய வழியை சொல்லாம ஏண்டா சுத்திகிட்டு போறமாதிரி தப்பான வழியை சொல்லி அவர சுத்த விடற”? அப்படின்னு கேட்டேன்.
”போடா, அதனால உனக்கு என்ன நஷ்டம்? அந்த ஆளு, நாலு தெரு சுத்திக்கிட்டுதான் போகட்டுமே.” என்று கிண்டலாகக் கூறினான்.
“இதெல்லாம் தப்பு கரண். மருத்துவமனையில யாருக்கு என்ன பிரச்சனையோ, இப்படி செய்திட்டயே, இது சரியா?”ன்னு கேட்டேன்.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டே கரண் வீடு வரை வந்து விட்டோம். அவனது வீடும் என் வீடும் பக்கத்துலதான் இருக்கு. கரண் வீடு பூட்டி இருந்ததால, அவனை கூட்டிக்கிட்டு என் வீட்டிற்குப் போனோம்.
“அம்மா, கரணுடைய அம்மா எங்க போய் இருக்காங்கன்னு தெரியுமா ? உங்க கிட்ட சாவி கொடுத்திட்டு போய் இருக்காங்களா?”
“அது வந்து … இன்னைக்கு மதியம் 3 மணிக்கு கரணுடைய அப்பா கடைக்குப் போகும்போது வேகமா வந்த ஒரு கார் அவர் மேல மோதியது. அதனால அவருக்கு அடிபட்டு ரொம்ப ரத்தம் போயிடுச்சி. பக்கத்து ஊரில் இருக்கற எனக்கு தெரிஞ்ச ஒரு தோழிக்கு போன் செய்து சொன்னேன். அவளுடைய கணவருக்கு அதே பிளட் குரூப்பாம். ரத்தம் கொடுக்க அவளுடைய கணவர் வரும்போது ஏதோ ஒரு பையன் தவறா வழி சொல்லிட்டானாம். எப்படியோ அவர் சுத்திக்கிட்டு வந்து சேர்ந்தார்.
இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தார்னா உங்க அப்பா பொழச்சிருக்க மாட்டார். ஏதோ கடவுள் புண்ணியம் சரியான நேரத்துக்கு வந்து ரத்தம் கொடுத்திட்டார். இப்போ எதுவும் பிரச்சனை இல்ல. அதனால நீ எங்க வீட்டுல வந்து சாப்பிட்டுட்டு அதுக்கு அப்பறம் ஆஸ்பத்திரிக்கு போ.” அப்படின்னு எங்க அம்மா சொன்னாங்க.
இதைக் கேட்ட கரண் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டான். ‘கெடுவான், கேடு நினைப்பான் ’ அப்படின்னு சொல்றது உண்மைதான். எங்க அப்பாவிற்கு ரத்தம் கொடுக்க வந்தவருகிட்ட தப்பான வழி சொல்லி அவர அலைய விட்டேன். அவர் சுத்திக்கிட்டு போகட்டும்னு கெட்டது நெனச்சேன். இன்னும் கொஞ்சம் லேட்டா போய் இருந்தா என் குடும்பத்திற்குத்தான் கெடுதல் வந்திருக்கும். நான் இப்படி கெடுதல் நினைக்கறதால யாராவது ஒருத்தர் பாதிக்கப்படுவார்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன். இனி நான் யாருக்கும் எப்பவும் கெடுதல் செய்ய மாட்டேன்னு கரண் சொன்னான் ஐயா” என்று சொல்லி முடித்தான் வருண்.
ஆசிரியர் உட்பட அங்கிருந்த எல்லோரும் கைதட்டினர்.
நீதி : யாருக்காவது கெடுதல் நினைத்தால், அது நமக்கே கெடுதலாய் வந்து முடியும். |
---|
- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT