Published : 16 Oct 2019 06:00 PM
Last Updated : 16 Oct 2019 06:00 PM
"அரசுப் பள்ளி மாணவிகளுக்கான எனது பயிற்சிப் பயிலரங்குகள் முடியும்போதெல்லாம் அம்மாணவிகளிடம் தங்கள் எதிர்காலம் சார்ந்து உருவாகும் நம்பிக்கை அலைகள்தான் என்னை இப்பணியைத் தொடர உற்சாகம் அளிக்கிறது..."
தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு நிபுணராகப் பணிபுரிகிறார் யோகிதா. பணி சார்ந்து ஐடி நிறுவனங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல், பெண் குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து பள்ளிகளிலிருந்து தெளிவு பெற வேண்டும் என்பதற்காக மேற்படிப்பு சார்ந்தும், வேலை வாய்ப்பு சார்ந்தும் பயிற்சிப் பயிலரங்குகளை பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நடத்தி வருகிறார்.
அதுவும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இந்தச் சேவையைச் செய்து வருகிறார் யோகிதா.
தன்னை 'ஒன் வுமன் ஆர்மி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட யோகிதாவுடன் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் நடத்திய நேர்காணல்.
யோகிதா
உங்களைப் பற்றி சிறிய அறிமுகம்?
நான் மங்களூரைச் சேர்ந்தவள். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவாவில்தான். கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்தேன். தற்போது ஐடி நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு நிபுணராகப் பணிபுரிந்து வருகிறேன். நாம் பிறருக்குச் செய்யும் உதவியால் அவர்கள் மீண்டும் நம்மைச் சார்ந்திருக்காத வகையில் திறன் பெற்றிருக்க வேண்டும். அதுவே தானம். இதனையே நான் எனது வாழ்க்கையிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவிகளுக்காக கல்வி சார்ந்து பயிற்சிப் பயிலரங்குகள் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது? உங்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இதைச் செய்கிறீர்களா?
மாணவிகளுக்கு பயிற்சிப் பயிலரங்குகளை நடத்துவது என்பது திடீரென எனக்குத் தோன்றியது இல்லை. சிறு வயதிலிருந்தே இந்த எண்ணம் எனக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது. இந்த எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது என்றுதான் கூற வேண்டும். எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்த எண்ணத்தைக் கடந்த வருடத்திலிருந்து செயல்படுத்தி வருகிறோம்.
உண்மையைக் கூறப்போனால் நான் எந்தத் தன்னார்வ அமைப்புடனும் தொடர்பில் இல்லை. நானும் எந்த ஒரு தன்னார்வ நிறுவனத்தையும் நடத்தவில்லை. நான் 'ஒன் வுமன் ஆர்மி'. எனக்கு எனது கணவர் மற்றும் எனது மகனின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள சிறந்த நிபுணர்களைத் தொடர்புகொண்டு அரசுப் பள்ளி மாணவிகளுக்கான இந்த இலவசப் பயிலரங்கை நடத்தி வருகிறேன்.
நீங்கள் நடத்தும் பயிலரங்குகள் மாணவிகளுக்கு அவர்களது எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு எந்த வகையில் உதவி புரியும்? பயிலரங்கில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பற்றி?
#joyofgivingcareerawareness என்ற தலைப்பில் நான் கடந்த வருடத்திலிருந்து மாணவிகளுக்குப் பயிலரங்கை நடத்தி வருகிறேன். இதற்காக சென்னையில் முன்மாதிரியாகச் செயல்படும் மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து பயிலரங்குகளை நடத்துகிறோம்.
உதாரணத்துக்கு இந்த ஆண்டு நடந்த #joyofgivingcareerawareness நிகழ்வின் முதல் நாளில் ஆற்காடு இளவரசர் ஆசிஃப் அலி கலந்து கொண்டார். மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உற்சாகமான தொடக்க உரையை அவர் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து சீன மருத்துவ முறையான அக்குபஞ்சர் குறித்து அத்துறை சார்ந்த நிபுணர் அமுதா மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த உரையாடல் மாணவிகளுக்கு உறுதியாகப் பயனளிக்கும் வகையில் அமைந்தது.
பத்திரிகை, ஓட்டல் மேலாண்மை என பல துறைகள் சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மாணவிகளிடம் அவர்கள் துறை சார்ந்த அனுபவங்களையும், வேலைவாய்ப்பு குறித்தும் கலந்தாலோசித்தார்கள்.
இதன் மூலம் மாணவிகள் தங்களது மேற்படிப்பு குறித்த குழப்ப நிலையிலிருந்து விலகி சற்று தெளிவு பெற்றார்கள். மாணவிகளுக்குக் கல்வி சார்ந்து வழங்கும் இந்தப் பயிலரங்கங்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் இந்தப் பயிலரங்குகளில் மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகளை அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கற்றுக் கொடுத்தார்கள். மாணவிகளும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டார்கள். இந்த அனுபவம் மாணவிகளுக்கும், எனக்கும் முழுமையான மன நிறைவை அளித்தது.
மாணவர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்கள்?
நான் கடந்த வருடத்திலிருந்துதான் மாணவிகளுக்கு இலவசமாகப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இதில் இதற்கு முன்னர் எங்களது பயிலரங்கத்திற்கு வந்த முன்னாள் மாணவிகள் இந்த ஆண்டில் எங்களது நிகழ்வுக்கு வந்த தங்களது ஜூனியர் மாணவிகளிடம், ''இந்தப் பயிலரங்க அனுபவம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்'' என்று நம்பிக்கையூட்டி அனுப்பியதாக என்னிடம் தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் மாணவிகளை புதிய அனுபவத்திற்காக, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு பயிலரங்கப் பயிற்சிக்காக அழைத்துச் செல்வது வழக்கம் . அப்போது அவர்கள் அவர்கள் நட்சத்திர ஓட்டல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போதுதான் பார்ப்பதாக என்னிடம் கண்களில் மகிழ்ச்சி மின்னக் கூறுவார்கள். அவர்களுடன் ஒரு நாளை அங்கு செலவிடும் நேரத்தை என் மறக்க முடியாத அனுபவமாகச் சேகரித்து வருகிறேன்.
எதிர்காலத் திட்டங்கள்?
பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் கல்விக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இதுவே எனது இலக்கு. மாணவர்கள் மட்டுமல்லாது, மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும், தீக்காயம் அடைந்தவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த என்னால் முடிந்த நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது ஏற்பாடு செய்து இருக்கிறேன். இதனையும் தொடர வேண்டும்.
இவ்வாறு யோகிதா தெரிவித்தார்.
தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT