Published : 25 Mar 2025 06:10 AM
Last Updated : 25 Mar 2025 06:10 AM

வகுப்பறை மாறி உட்கார்ந்தால் தவறா? | வகுப்பறை புதிது 12

உலகின் தலைசிறந்த கல்வி வழங்கும் நாடு எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பலரும் பின்லாந்து என்கின்றனர். “நாங்கள் ஆசிரியர்களை நம்புகிறோம்” எனும் தலைப்பில் பின்லாந்து கல்வி குறித்த புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். பின்லாந்தின் கல்வியாளர் பாசி சால்பர்க், அமெரிக்காவில் பிறந்தாலும் பின்லாந்தில் ஆசிரியராக பணியாற்றும் டிமோதி வாக்கர் ஆகிய இருவர் இணைந்து எழுதிய புத்தகம் இது.

பாசி சால்பர்க் அண்மையில் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கருத்தரங்கத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்புதான், “வகுப்பறை மாறி உட்கார்ந்தால் தவறா?” இந்தப் புத்தகம் பின்லாந்து கல்வியின் ஏழு அடிப்படைகளை அலசுகிறது. ஆசிரியர்களால் இயக்கப்படும் கல்விமுறை என்று பின்லாந்து கல்விமுறையை இந்த புத்தகம் அழைக்கிறது.

ஆட, பாட தெரிந்த ஆசிரியர்கள்: வழிகாட்டு நெறியாளர் போன்ற கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் ஆசிரியராகக் கண்டிப்பாக வாரத்துக்கு நான்கு நாட்களாவது பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவதைப் பின்லாந்து அரசு கட்டாயமாக்கி உள்ளது. தொடர் வகுப்பறை அனுபவம் அற்ற ஒருவர் அங்கே கல்வியில் ஈடுபட சாத்தியமே இல்லை. பின்லாந்து ஆசிரியர்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள். அனைவருமே முதுகலை பட்டதாரிகள். இசைக் கருவிகள் வாசித்தல், நாடகம், மேடைப்பேச்சு, எழுத்து என்று பல்துறை வித்தகர்களாக அவர்கள் செதுக்கப்படுகிறார்கள்.

அது என்ன ஏழு அம்சங்கள்? ஏழு வயதில் தொடங்கும் கல்வி. ஆறாம் வகுப்புக்கு பிறகே அறிமுகம் ஆகும் சிறுசிறு தேர்வுகள். பள்ளி இறுதி ஆண்டில் மட்டுமே மதிப்பெண் பட்டியல் என்னும் மார்க் ஷீட். இருப்பதிலேயே அற்புதமான ஒரு விஷயம். ஒருங்கிணைந்த கல்வி என்கின்ற பாடமுறை பின்பற்றப்படுகிறது.

உதாரணமாக, 7ஆம் வகுப்பில் “காலநிலை மாற்றம்” தலைப்பு ஒரு மாதம் இடம்பெறுகிறது. அப்போது அறிவியல் பாட வேளையில் வானிலை மாறுபாடுகள் நடத்தப்படுகிறது. கணித பாடவேளையிலும் காலநிலை தொடர்பான தரவுகள் கணக்கிடப்படுகிறது. சமூக அறிவியல் பாட வேளையிலும் காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய தாக்கங்கள் விவாதிக்கப்படுகின்றன. மொழிப்பாட வேளையில் அறிக்கை தயாரித்தல் எப்படி என்பது சொல்லித்தரப்படுகிறது. ஒரே ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பாட துறைக்கும் அந்தந்த வகையீட்டுக்கு தக்கவாறு வகுப்பறை செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன.

அப்துல் கலாமின் ஏக்கம்: அதேமாதிரி விண்வெளி ஆராய்ச்சி பற்றிய பாடம் 9ஆம் வகுப்பில் உள்ளது. அறிவியல் பாடவேளையில் ராக்கெட் இயக்கம், கோள்கள் பற்றிய அறிவியல், கணித பாடத்தில் கோள்களுக்கு இடையிலான தொலைவைக் கணக்கிடுதல் குறித்த கல்வி, வரலாற்றுப் பாடத்தில் விண்வெளி வரலாறு, மொழிப்பாடத்தில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளை எழுதும் பயிற்சி, கலைப் பாட வேளையில் எதிர்காலத்தில் விண்வெளியில் குடியிருப்புகளை வடிவமைத்தல் என்று பாட முறையே இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் வகுப்பறை மாறி உட்கார்ந்து கணிதத்தைக் கவனித்ததால் தன்னை ஆசிரியர் நைய புடைத்து விட்டார் என்று தனது சுயசரிதையான “அக்னிச் சிறகுகள்” நூலில் அப்துல் கலாம் எழுதியிருப்பார். பின்லாந்தின் பள்ளிக்கூடங்களில் நீங்கள் வகுப்பறை மாறி அமரலாம். உங்களுடைய வகுப்பின் பிரிவையும் பாட ஆசிரியர்களையும் நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

அதை விட அழகான விஷயம், 8ஆம் வகுப்பு அல்ஜீப்ரா புரியவில்லை என்றால் அதை மீண்டும் கற்றுக்கொள்ள இரண்டு நாட்களுக்கு 6ஆம் வகுப்பில் போய் நீங்கள் அமருவதற்கான முழு சுதந்திரத்தை பின்லாந்து பள்ளிக்கூடம் வழங்குகிறது என்று இந்த புத்தகம் பேசுகிறது. நம் கல்வியின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பவர்கள் இதையும் பரிசீலிக்க வேண்டும்.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x