Published : 14 Jan 2025 06:12 AM
Last Updated : 14 Jan 2025 06:12 AM
ஒன்று என்பதைக் குறிக்கும் சொற்கள் a, one ஆகியவை. இவற்றில் எதை எப்போது பயன்படுத்துவது? I need a cup of coffee என்பது சரியா அல்லது I need one cup of coffee என்பது சரியா?
சில இடங்களில் இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட பிரிவில் உள்ள ஏதோ ஒன்று என்றால் ‘a’ என்பதைப் பயன்படுத்தலாம். I need a cup of coffee. I need a chair. ஆனால், ‘ஒன்றே ஒன்றுதான்’ என்கிற அர்த்தம் வரும்போது one என்பதைப் பயன்படுத்த வேண்டும். Do you want one bun or two?
The Inspector took just one look and he confessed everything.
Are you staying here just one night?
Do you need two cups of coffee என்று யாராவது கேட்டால் I need just one cup of coffee எனலாம்.
One..other, One..another என்பதுபோல் இடம்பெறக்கூடிய சொற்களில் a..other, a..another என்று பயன்படுத்தக் கூடாது.
The monkey jumped from one tree to another. Please come one day to my house என்பது சரி. ஏனென்றால் (அது எந்த நாள் என்பது குறிப்பிடப்படாவிட்டாலும்) ஏதோ ஒரு குறிப்பிட்ட நாள் என்பதைக் குறிக்கிறது.
தலைமுடி தைல விளம்பரம் ஒன்றில், “revolutionary hare care” என்று குறிப்பிட்டிருந்ததைக் கவனித்தீர்களா?
கவனிக்கவில்லை. அப்படியானால் hair என்பதற்குப் பதிலாக (முயலைக் குறிக்கும்) hare என்று சொல்லைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எனது நண்பர் அரசுத் துறை ஒன்றில் பணிபுரிந்தவர். அவர் கூறிய விபரீதம் நினைவுக்கு வருகிறது. அரசு உயர் அதிகாரிக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஏழ்மையை அகற்றும் திட்டங்கள் குறித்து விவரமாக எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் உயர் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
‘ஏழ்மையை மேலும் வளர்க்க வேண்டுமா? அதற்கான திட்டங்களா?’ என்னவோ பிழை என்பது மட்டும் புரிந்தது. பிறகுதான் தெரிந்தது Poverty Alleviation என்பதற்குப் பதிலாக Poverty Elevation என்கிற சொற்களைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று.
நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அருந்த வேண்டியது less sugar coffeeஆ? sugarless coffeeஆ?
அது எந்த அளவுக்கு அவர்கள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. குறைவான சர்க்கரை போடப்பட்ட காபி என்பது less sugared coffee. சர்க்கரையே போடப் படாத காபி sugarless coffee.
திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டு வந்த ஒருவர் கூறியது இது. ‘முன்பு எனக்கு hair less. இப்போது நான் hairless.’
கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
- aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment