Published : 24 Dec 2024 03:22 AM
Last Updated : 24 Dec 2024 03:22 AM
இளம் உலக செஸ் சாம்பியனாக வேண்டும் என 11 வயதில் கண்ட கனவை 18 வயதில் சாத்தியமாக்கி வரலாற்றில் அழியா தடம் பதித்து வெற்றி நடை போடுகிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். வெற்றிக்கு வழிகாட்டும் சுடராக திகழும் அவரை பற்றிய தகவல்களைச் சேகரித்து எழுதும் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது.
* 2006-ல் சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பத்மகுமாரிக்கும் டாக்டர் ரஜினிகாந்துக்கும் பிறந்த இளந்தளிர்.
* 7 வயதிலிருந்து செஸ் விளையாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பல சாதனைகளைக் குவித்த இளம் வீரர்.
* 2018-ல் 12 வயதில் ஆசிய இளம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற செஸ் அசுரன்.
* 2023 செப்டம்பரில் இந்திய செஸ்ஸின் வேந்தன் மற்றும் தனது முன்மாதிரியான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் 8-வது இடத்தை அடைந்த அணையா கனல்.
* 2024 நவம்பரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனோடு 13 சுற்றுகளிலும் சரிசமமாக ஆடிய இந்திய செஸ் சக்கரவர்த்தி.
* 14-ம் சுற்று (13.12.2024). ஒட்டுமொத்த இந்தியாவும் இருக்கை முனையில் அமர்ந்து ஆட்டத்தை உற்று நோக்கியது. ஆட்டம் விறுவிறுப்பாகவும், சரிசமமாகவும் சென்றது. டிங் லிரன்னின் 55-வது நகர்த்தலில் மாபெரும் திருப்பம். வியக்கத்தக்கத் திறமையுடைய நமது இந்திய வீரரின் விடா முயற்சிக்குக் கிடைத்த பரிசு. உலக வரலாற்றின் புதிய சகாப்தமாகத் தனது வெற்றியைக் கிரகிக்க இயலாமல் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கி மக்களையும் ததும்பச் செய்தார்.
* 2013-ல் இந்தியாவின் கைவசம் இருந்த உலக சதுரங்க வாகைப் பட்டம் நார்வே வீரர் கார்ல்சன் வசம் சென்றது. அப்போதைய இந்தியாவின் நம்பிக்கை இழந்த உள்ளங்களுக்குத் தெரியாது, வரலாற்றில் புதிய சகாப்தம் படைக்கத் தீப்பிழம்பாக அங்கு ஒரு சிறுவன் உருவெடுக்கிறான் என்று. அதை மீட்க அயராது உழைத்து தனது அசாதாரண திறமையால் அப்பட்டத்தை மீட்டார். அவர்தான் 18 வயதான "18-வது உலக வாகையாளர்" என்னும் பட்டத்திற்குச் சொந்தக்காரர் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் தொம்மராஜு.
- நி.ஹலிமா சாதியா, பிளஸ் 1, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT