Published : 17 Dec 2024 06:20 AM
Last Updated : 17 Dec 2024 06:20 AM
மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் கணிதத்துறைக்கு அள்ள அள்ளக் குறையாத அறிவு பொக்கிஷத்தை வாரி வழங்கியவர் கணித மேதை சீனிவாச ராமானுஜன். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தைப் படித்தால் இப்படி ஒரு மனிதரா என ஆச்சரியக்குறி எழாமல் இருக்காது. சர்வதேச அளவில் இன்றும் ராமானுஜனுக்குப் பேரும் புகழும் உள்ளது. அவர் வாழ்க்கை முழுக்க சவால் நிறைத்ததாகவே இருந்தது. குழந்தைகள், இவரின் வாழ்க்கை வரலாற்றினை வாசித்தால் பல வழிகளில் உற்சாகம் கொள்வார்கள்.
இத்தகைய கணித மேதை ராமானுஜன் பிறந்த டிசம்பர் 22-ஐ இந்தியக் கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். வாழ்வினை மேம்படுத்தவே கணிதம் என்பதை உணர வைக்க ஒரு நாள். ராமானுஜத்தின் புகழையும் அவர் கண்டுபிடிப்புகளையும் எல்லோரிடமும் கொண்டு செல்ல ஒரு நாள். அதிவேகமாக முன்னேறும் உலகில் கணிதம் எவ்வளவு அடிப்படையானது என்று அழுத்திச்சொல்ல ஒரு நாள். இந்த நோக்கங்களில் கணித தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அவருக்கு கணிதம், எனக்கு? ஆகச்சிறந்த ஆளுமைகள் தான் வாழ்ந்த காலகட்டத்தில் எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் சாதித்தனர் என்பதை அறியும்போது குழந்தைகளுக்கு உத்வேகம் பிறக்கும். அதேபோல அவர்கள் வாழ்ந்த காலத்தில் சக ஆய்வாளர்கள், மாணவர்கள் என்னவானார்கள், எங்கே தொலைந்தார்கள் என்ற கேள்வி எழும்போது தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கிற அக்கறை உண்டாகும். ராமானுஜன் பற்றி வாசிக்கும்போது அவரின் அர்ப்பணிப்பினை வியக்காமல் இருக்க முடியாது.
கல்லூரி மாணவர்களின் புத்தகமான ‘Plane Trigonometry’யை 11 வயதில் வாசிக்கத் தொடங்குகிறார். ஒன்றரை ஆண்டுகளில் கரைத்துக் குடித்துவிடுகிறார். வயதுக்கு மீறிய தலைப்பு என்றாலும் ஆர்வமும் விடாப்பிடி குணமும் மேதையாக உருவெடுக்க அவருக்கு அடித்தளமிட்டன. எந்நேரமும் கணிதம் என இருந்ததால் மட்டுமே அவரால் இவ்வளவு சிந்திக்கவும் சாதிக்கவும் முடிந்தது. அவருக்குக் கணிதம் நமக்கு என்ன என ஒவ்வொரு குழந்தையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து கணித தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் அறிவியல் தினம் போன்று வெகு விமர்சையாக இதுவரை கொண்டாடப்படவில்லை. இதில் ஒரு நுட்பமான சிக்கல் உள்ளது. டிசம்பர் மூன்றாம் வாரத்தில் பள்ளி செயல்படுவது அரிது. ஒன்று, அரையாண்டு தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கும்.
அல்லது அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் இருப்பார்கள். இதே நாளில் விழா மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கவே செய்கிறது. ஆகவே பள்ளிகள் இரண்டு வாரங்கள் முன்பு அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கணித தினத்தை கொண்டாடத் திட்டமிடலாம்.
அதற்கு முன்னதாகக் கணிதத்தைப் பரப்புவதில் அரசும், அமைப்புகளும் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டும். இதற்கென விமர்சையாக ஏற்பாடுகள், பிரச்சாரக்கூட்டம், நாடகம், கலைப் போட்டிகள் எனப் பலவிதமாக யோசிக்கலாம். கணிதம் என்றால் புதிர்களுக்கு விடை காண்பது என்பதிலிருந்து முதலில் அகல வேண்டும்.
கணிதக் கண்காட்சிகளைப் பிரத்தியேகமாக உருவாக்குவது அவசியம். உள்ளூர் அளவில் கணித வட்டங்கள் அமைத்து இந்த நாளில் அதற்கான தொடக்க விழாவை நடத்தலாம். இது மட்டுமின்றி ஆசிரியர்களுக்கான பட்டறைகள், பெற்றோர்களுக்குக் கணித விளையாட்டுகள், விவாத மேடை, கணித உரைகள் எனக் களைக்கட்டச் செய்யலாம்.
கணிதம் என்றால் இனிமை: கணிதம் என்றாலே கசப்பு என்கிற பொதுப்புத்தியை அகற்றிட இந்தியக் கணித தினத்தினை மட்டுமல்ல கணிதம் சார்ந்த பல்வேறு தினங்களைக் கொண்டாடுவது அவசியமாகிறது. ஏதோ ஒரு நிகழ்வு கணிதத்தைக் குழந்தைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே வெற்றி. கணிதம் பற்றிப் பேசுவதற்குக் குழந்தைகளுக்கு எந்த மேடையும் இருப்பதில்லை.
இந்தியக் கணிதம் என்றால் ராமானுஜன் என்ற ஆளுமை மட்டுமே பொதுச் சமூகத்தின் மனத்தில் பதிந்துள்ளது. இன்னும் கணித ஆளுமைகள் பலர் சாதனைகள் பல புரிந்துள்ளனர். அவர்களையும் இந்த நாளில் நினைவுகூர்வது அவசியம், தேவையேற்படின் கல்வி நிறுவனங்கள் அவர்களுக்காக பிரத்தியேக நிகழ்ச்சிகள்கூட ஏற்பாடு செய்யலாம்.
ஆளுமைகளின் பெயரால் ஆய்வகங்கள், மையங்கள், அரங்கங்கள் அமைக்கலாம். கணிதக் கல்வியை எல்லோரிடமும் எடுத்துச் செல்வது அவசியமாகிறது. கணிதம் எத்தனை இனிமையானது என்பதை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘தேன்கணி’, ‘கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; umanaths@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT