Last Updated : 17 Dec, 2024 06:14 AM

 

Published : 17 Dec 2024 06:14 AM
Last Updated : 17 Dec 2024 06:14 AM

Older, elder இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 110

நிச்சயம் உண்டு. Older, oldest ஆகிய சொற்களை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம் உயிரற்ற பொருட்களுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் elder, eldest ஆகிய சொற்களை மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். Elder என்பதை மரியாதைக்குரிய வர்களுக்கு பயன்படுத்துவோம். She is my elder sister. Always respect elders.

கேவல் ஒலியை ஆங்கிலத்தில் எப்படி குறிப்பிடலாம்? மலர்ந்தும் மலராத திரைப்படப் பாடலில் ‘மாமன் தங்கை மகளான.. மங்கை உனக்காக’ என்ற வார்த்தைகளுக்குப் பிறகு சுசீலாம்மா ஓர் ஒலியை வெளிப்படுத்தி இருப்பார்கள். அதுதான் கேவல் ஒலி - ஓர் எடுத்துக்காட்டுடன் கேள்வியை உணர்த்தியதற்கு நன்றி. அதற்கு return gift ஆக ‘குறிஞ்சி மலர்’ புதினத்தில் நா.பார்த்தசாரதி எழுதிய ஒரு விவரிப்பை இங்கு அளிக்கிறேன். ‘ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகை பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு’.

கேவல் ஒலியை, விம்மல் என்றும் கூறலாம். இவற்றுக்கான ஆங்கிலச் சொல்லாக soft sobbing என்பதைப் பயன்படுத்தலாம். (Sobbing என்பது தேம்பி அழுதல்) வேறொரு வாசகர் whoop என்பதற்கும் oops என்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டிருக்கிறார். அதையும் இங்கே விளக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Whoop என்பது உரத்த ஒலியை எழுப்புவது. அது உங்கள் உற்சாகத்தை உணர்த்துவதாக இருக்கும். Oops என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொல். நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள் என்றால் அப்போது oops என்ற சொல்லால் அதை வெளிப்படுத்துவீர்கள்.

உலக அழகி பட்டம் பெற்ற ஒருவரது தாய் தன் மகனைப் பற்றி collateral damage என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? - நானும் அந்தக் கட்டுரையைப் படிக்க நேரிட்டது. தன் மகளின் வருங்காலம் தொடர்பாகவே முழு முனைப்பு காட்டியதால் மகனை சரியாகக் கவனிக்க முடியவில்லை என்ற பொருளில் அவர் கூறியிருக்கிறார்.

போரின்போது எதிரி நாட்டு ராணுவத்தை அழிப்பதுதான் நோக்கமாக இருக்கும். ஆனால், இந்த முயற்சியில் எதிரணியைச் சேர்ந்த சில அப்பாவிப் பொதுமக்களும் இறந்து விடுவதுண்டு. அதைத்தான் முதலில் collateral damage என்று குறிப்பிட்டார்கள்.

வங்கியில் ஒருவருக்கு கடன் அளிக்கும்போது collateral security என்று ஒன்றைக் கேட்பதுண்டு. இது வீடு, மனை, பங்குகள் போன்ற எதுவாகவும் இருக்கலாம். கடனை வாங்கியவர் அதைத் திருப்பித் தர முடியாத நிலையில் collateral securityயாக வைக்கப்பட்ட பொருளை விற்று வங்கி தனக்கு வர வேண்டிய கடன்தொகையை எடுத்துக்கொள்ளும். இதை துணைப் பிணையம் என்று கொள்ளலாம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x