Published : 17 Dec 2024 06:06 AM
Last Updated : 17 Dec 2024 06:06 AM
இப்போது மணி என்ன? கைப்பேசி அல்லது கடிகாரம் பார்த்து நேரம் அறிகிறோம். இந்தியாவில் IST எனப்படும் இந்திய சீர் நேரத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிலாந்தின் கிரீன்விச்சின் கிழக்கே 82.5° தீர்க்கரேகையில் உள்ள அலகாபாத் ஆய்வக நேரத்தைதான் நாம் இந்திய சீர் நேரம் என்கிறோம். GMT எனும் கிரீன்விச் உலக சீர் நேரத்தைவிட இந்திய சீர் நேரம் +5.30 மணி கூடுதலாகும். இந்தியாவில் காலை 5.30 மணி என்றால் லண்டனில் கிரீன்விச் நேரப்படி இரவு 12 மணி என்று இதனை புரிந்துகொள்ளலாம்.
பூமிக் கோளை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நாளும் ஒரே வேகத்தில் சூரியனை பூமி சுற்றுவதில்லை. மற்ற கோள்களின் தாக்கம், பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்றவை காரணமாகச் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் சீர் நேரக் கணக்கீடுகளைப் பாதிக்கும்.
ஆகவேதான் அவ்வப்போது லீப் நொடிகளைச் சேர்ப்பார்கள் அல்லது கழிப்பார்கள். இது நவீனத் தொழில்நுட்பத் தேவைக்குச் சாதகமானதல்ல. ஆகையால், ஒருங்கிணைந்த நேரக் கணக்கீடு தேவைப்படுகிறது. இந்தியா உள்பட உலகின் 70 ஆய்வகங்களில் உள்ள 500 அணுக் கடிகாரங்கள் கொண்டு UTC நிர்ணயம் செய்யப்படுகிறது. UTCயும் GMTயும் மேலோட்டமாக ஒன்றுபோல தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல.
சந்திரனில் வேகமெடுக்கும் கடிகாரம்: இதுவரை நாம் பேசியது பூமி நேரம் பற்றி. அது சரி, நிலவுக்குத் தனியான நேரம் தேவையா என்ன? இதுவரை நிலவுப்பயணம் போன்ற நிகழ்வுகளில் UTC எனும் சர்வதேச ஒருங்கிணைப்பு நேரத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால், நிலவின் இயக்கத்திலும் ஆண்டுதோறும் மாற்றம் ஏற்படு கிறது. அதேபோல நிலவின் ஈர்ப்பு விசை குறைவு என்பதால் அங்கு காலம் சற்று வேகமாகப் பாயும்.
நாளொன்றுக்கு நிலவின் கடிகாரம் பூமியின் கடிகாரத்தைவிட 56 மைக்ரோ விநாடிகள் கூடுதலாகக் காட்டும். மைக்ரோ விநாடி என்பது ஒரு விநாடியின் பத்து லட்சம் பகுதியில் ஒரு பகுதி. இவ்வளவு நுணுக்கமான கால வேறுபாட்டை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்? ஒளியின் வேகத்தில் பயணிப்பதாக கணக்கிட்டால் 56 மைக்ரோ விநாடிகளில் 16.8 கிலோமீட்டர் தொலைவு சென்றுவிட முடியும் என்பதால் இவ்வளவு துல்லியமான வேறுபாட்டைக் கணக்கிட வேண்டியுள்ளது.
ஆர்டிமிஸ் எனும் திட்டத்தின் தொடர்ச்சியாக நிலவில் மனிதக் குடியிருப்பை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளும் வருங்காலத்தில் நிலவில் சோதனை குடியிருப்பை ஏற்படுத்த உள்ளன. இந்தியாவும் நிலவுக்குச் செல்ல ஆர்வம் காட்டிவருகிறது.
இந்நிலையில் 2026-க்குள் நிலவுக்கான சீர் நேரம் அல்லது நிலவு ஒருங்கிணைந்த நிலவு நேரம் (Coordinated Lunar Time -LTC) ஒன்றை வடிவமைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. நிலவில் குடியிருப்பு ஏற்படுத்தினால் நிலவைச் சுற்றிவரும் கோள் பற்றி செயற்கை கலன்களின் உதவியோடு ஜிபிஎஸ் போன்ற பயண வழித்தடச் சேவைகள் தேவைப்படும். செல்பேசி போன்ற தகவல் தொடர்பு வசதி, நிலவில் வலைத்தளம் உள்ளிட்டவை தேவைப்படும். இவை முறையாக இயங்க ஒருங்கிணைந்த நிலவு நேரம் உதவும்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT